தமிழ் முறைப்படி பாலக்காட்டில் கல்பாத்தி தேர் திருவிழா; மயிலாடுதுறையில் சிவாச்சாரியார்களுக்கு அழைப்பிதழ்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29அக் 2023 11:10
மயிலாடுதுறை: 300 ஆண்டுகளுக்கு முன்பு முன்னோர்கள் வாழ்ந்த மயிலாடுதுறையில் சிறப்பு வழிபாடு செய்து அழைப்பிதழ் வழங்கி நிர்வாகிகள் அசத்தல்.
கேரள மாநிலம் பாலக்காட்டில் காசியில் பாதி கல்பாத்தி எனும் பிரசித்திமான கல்பாத்தி அக்ரஹாரத்தை சேர்ந்த நான்கு அக்ரஹரங்கள் அமைந்துள்ளது. இங்கு நடைபெறும் கல்பாத்தி தேர் திருவிழா கேரளா மற்றும் பிற மாநிலங்களில் பிரசித்தி பெற்றது. இவ்வாண்டு நவம்பர் 8ம் தேதி ஆரம்பமாகி நவம்பர் 17 அன்று தீர்த்தவாரி உற்சவத்துடன் நிறைவுபெறுகிறது. இந்த கல்பாத்தி தேர் திருவிழா அழைப்பிதழை கல்பாத்தி அக்ரஹரங்களைச் சேர்ந்தவர்கள் சூரியனார் கோவில் ஆதீனத்திற்கு நேரில் வந்து சிறப்பு வழிபாடு செய்து வழங்கினர். அழைப்பிதழை பெற்றுக்கொண்ட சூரியனார் கோயில் வாமதேவ சிவாக்ர யோகிகள் ஆதீனம் 28வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் கூறுகையில், கேரளாவில் பெரும்பாலும் தாந்த்ரீக முறையில் தான் வழிபாடு நடைபெறும். 300 ஆண்டுகளுக்கு முன்பு பூஜைக்காக இங்கிருந்து சென்றவர்கள் தமிழக முறைப்படி கல்பாத்தி திருவிழா நடத்துவது வரவேற்கத்தக்கது. திருவிழா அழைப்பிதழ் முதலில் இங்கு வந்து பிரார்த்தனையுடன் வரவேற்பது மகிழ்ச்சியாக உள்ளது என்றார். தொடர்ந்து கல்பாத்தி திருவிழா நிர்வாக பொறுப்பாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து பிரசாதம் வழங்கினார்.
தொடர்ந்து தங்களது முன்னோர்கள் வாழ்ந்த மயிலாடுதுறைக்கு வந்து கோவில் சிவாச்சாரியார்களுக்கு அழைப்பிதழ் வழங்கினார்.இதுகுறித்து கல்பாத்தி நான்கு அக்ரஹாரங்களை சேர்ந்த பொறுப்பாளர்கள் கூறுகையில்; சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் கோயில்களில் பூஜை செய்வதற்காக தஞ்சாவூர், மயிலாடுதுறை பகுதியிலிருந்து பிராமணர்கள் கேரளா அழைத்து செல்லப்பட்டனர். பாலக்காடு மாவட்டம் நகராட்சிக்குள் 18 பிராமண அக்ரஹாரங்கள் உள்ளன. தஞ்சாவூரில் இருந்து முன்னோர்கள் வந்த காரணத்தினால் இன்றும் தஞ்சை, மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலில் உற்சவம் நடக்கும் அதே நாட்களில் கல்பாத்தி காசி விஸ்வநாதர் கோயில், சாத்தபுரம் பிரசன்ன மகாகணபதி கோயில், பழைய கல்பாத்தி பெருமாள் கோயில் மற்றும் புதிய கல்பாத்தி மகா கணபதி கோயில் ஆகிய இடங்களில் மிக அழகாக பிரம்மாண்டமாக தமிழ் மற்றும் கேரளா ஆசாரத்துடன் ஜண்டை மங்கள வாத்திய இசையுடனும் உற்சவம் கொண்டாடப்படுகிறது.
இந்த விசேஷ நாட்களில் நான்கு அக்ரஹாரங்களிலும் வேத பாராயணம், விசேஷ அபிஷேகம் யாகசாலை பூஜைகள் மற்றும் அன்னதானம் மிகச் சிறப்பாக மேலும் தினமும் உற்சவமூர்த்தி அலங்கரித்த பல்லாக்கில் நான்கு கிராமங்களுக்கு ஊர்வலமாக புறப்பாடு நடக்கும். முக்கியமாக நவம்பர் 16ம் தேதி அன்று மாலை 6 மணி அளவில் கல்பாத்தி சந்திப்பில் அனைத்து ரதங்களும் ஒன்று கூடி காட்சியளிக்கும் அற்புதமான தருணத்தில் கற்பூர ஆரத்தி காண்பிக்கப்படும். இதை தேவரத சங்கமம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கண்கொள்ளாக்காட்சியை காண்பதற்கு மற்ற நகரங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் வந்து கலந்து கொள்கின்றனர். இந்த உற்சவத்திற்கு தஞ்சை பிரகதீஸ்வரர் மற்றும் மயிலாடுதுறை மயூரநாதரின் அனுக்கிரகம் கிடைக்குமாறு பிரார்த்தனை செய்து கொண்டோம். தமிழ் பாரம்பரிய வழிபாட்டுடன் கேரளாவில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழகத்தைச் சேர்ந்த மடாதிபதிகள், சைவ ஆதீனங்கள், துறவியர்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்க தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் என்றனர்.