பழநி: பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் ரூ.2 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டது.
பழநி முருகன் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள், பழநி மற்றும் பல்வேறு இடங்களில் உள்ளன. இதில் பல நிலங்கள் உபயதாரர்களால் பல்வேறு பணிக்காக கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதில் பழநி வட்டம், பழநி கிராமம் புல எண்கள் 87/2 உள்ள 0.61 ஏக்கர் நஞ்சை நிலம், புல் எண் 345/2 உள்ள 1.29 ஏக்கர் நஞ்சை நிலம், 617/1புல எண்ணில் 2.10 ஏக்கர் நஞ்சை நிலம், 621/2 புல எண்ணில் 0.02 ஏக்கர் நஞ்சை நிலம் பழநி கோயில் நிர்வாகத்திற்கு சொந்தமானது என நீதிமன்றம் உத்தரவு வழங்கியது. இவை சண்முக நதி, கோதைமங்கலம் பகுதியில் உள்ளது. இந்த கோயில் நிலத்தை தனிநபர்கள் ஆக்கிரமித்து இருந்தனர். நேற்று (நவ.2ல்) திண்டுக்கல் மாவட்ட ஹிந்து அறநிலையத்துறை உதவி கமிஷனர் சுரேஷ் தலைமையிலான குழுவினர் அப்பகுதிகளுக்கு சென்று அளவீடு செய்தனர். 4 ஏக்கர் நன்செய் நிலத்தை, 9 ஆண்டு கால சட்ட நடைமுறைக்கு பின் ஆக்கிரமிப்பில் இருந்த அப்பகுதியை மீட்டனர். மீட்கப்பட்ட நிலங்கள் ரூ.2 கோடி மதிப்புடையது. கோயிலுக்கு சொந்தமான இந்த நிலத்தில் அத்துமீறி ஆக்கிரமிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கோயில் நிர்வாகம் அறிவிப்பு பலகை வைத்துள்ளது. மீட்பு பணியில் ஹிந்து அறநிலையத்துறை சரக ஆய்வாளர் சாமிநாதன் மற்றும் ஊழியர்கள் உடன் இருந்தனர்.