மயிலாடுதுறை மக்களின் பயன்பாட்டுக்காக புதிய ஆம்புலன்ஸ்; தருமபுரம் ஆதீனம் வழங்கினார்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04நவ 2023 10:11
மயிலாடுதுறை: ஜென்ம நட்சத்திர விழாவையொட்டி திருமடத்தின் சார்பில் மயிலாடுதுறை மக்களின் பயன்பாட்டுக்காக புதிய ஆம்புலன்ஸை தருமபுரம் ஆதீனம் 27 -வது குரு மகா சன்னிதானம் வழங்கினார். ரத்ததான முகாம், பொது மருத்துவ முகாமும் நடத்தப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீன திருமடம் உள்ளது. இம்மடத்தின் 27-ஆவது குரு மகா சன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அருளாட்சி செய்து வருகிறார். இவரது ஜென்ம நட்சத்திர பிறந்தநாள் தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியின் சார்பில் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடத்தப்பட்ட ரத்ததான முகாமில் கல்லூரி பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் 60 பேர் ரத்ததானம் வழங்கினர். மேலும் பொது மருத்துவ முகாமில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் உடலை பரிசோதனை செய்து பயனடைந்தனர். முன்னதாக மயிலாடுதுறை பொதுமக்கள் பயன்பெறும் வகையில், தருமபுரம் ஆதீனத் திருமடம் சார்பில் வழங்கப்பட்ட ஆம்புலன்ஸ் வாகன செயல்பாட்டை தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் தொடக்கி வைத்தார். இதில் கல்லூரி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.