திருச்சுழி அருகே 10ம் நூற்றாண்டை சேர்ந்த சிவலிங்கம், கொற்றவை சிற்பம் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04நவ 2023 10:11
திருச்சுழி: திருச்சுழி அருகே 10 ம் நூற்றாண்டை சேர்ந்த சிவலிங்கம், கொற்றவை சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருச்சுழி அருகே உலக்குடியில் பாண்டியநாடு பண்பாட்டு மையத் தொல்லியல் கள ஆய்வாளர்கள் ஸ்ரீதர், தாமரைக்கண்ணன் ஆய்வு செய்தனர். அங்கு பாண்டியர்கள் கால சிற்பங்களை கண்டறிந்தனர். அவர்கள் கூறியதாவது : உலக்குடியில் வடக்கு திசையில் விவசாய நிலத்தின் ஓரமாக புதர்களில் ஒரு சிவலிங்கம் உள்ளது. இந்த சிவலிங்கம் சதுர வடிவ ஆவுடையுடன் செதுக்கப்பட்டுள்ளது. ஆவுடையானது இரண்டாக உடைந்துள்ளது. இது 10 ம் நூற்றாண்டில் இருந்த முற்காலபாண்டியர் காலத்தை சேர்ந்தது. சிவலிங்கம் அருகே கொற்றவை சிற்பம் உள்ளது. இது முற்றுப்பெறாத சிற்பம். தலைப்பகுதி கரண்ட மகுடமும் காதுகளில் காதணியும் உள்ளது. வலது கை கத்தியை பிடித்த படியும், இடது கையை கீழே தொங்கவிட்டும் அந்த கரத்தில் தெளிவற்ற ஒரு ஆயுதம் கண்டுபிடிக்க முடியாத நிலையில் உள்ளது. சிற்பம் 3 அடி உயரமும், ஒன்றரை அடி அகலமும் புடைப்புச் சிற்பமாக உள்ளது. இவற்றின் காலமும் சிவலிங்கத்தின் காலமும் ஒன்றாக கருதலாம். உலக்குடி பஸ் ஸ்டாப் அருகே பிற்கால பாண்டிய காலத்தில் சேர்ந்த விஷ்ணு சிற்பம் நின்ற கோலத்தில் உள்ளது. இது 4 அடி உயரத்தில் உள்ளது. 4 கரங்களுடன் வலது மேற்கரத்தில் சக்கரம் இடது மேற்கரத்தில் சங்கும் உள்ளது. வலது முன் கரத்தில் அபயம் காட்டியும், இடது முன்கரம் கடி ஹஸ்தமாகவும் வைத்து நின்ற கோலத்தில் உள்ளது. தலையில் கிரீட மகுடமும் மார்பில் முப்புரி நூலும் இடையில் இடைக்கச்சையுடன் உள்ளது. இது போன்ற சிற்பங்கள் இங்கே தொடர்ந்து கிடைப்பதால் ஒரு சிவன் கோவில் இருந்து அழிந்து இருக்கக் கூடும் என கருதலாம்" என்றனர்.