தென்காசி; தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோயில் ஐப்பசி திருக்கல்யாண விழாவில் தேரோட்டம் நடந்தது.
தென்காசி உலகம்மன் சமேத காசிவிஸ்வநாத சுவாமி கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா, கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள், வீதியுலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. தேரோட்டத்தை, எம்.எல்.ஏ., பழனி நாடார், தெற்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் ஜெயபாலன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சுப்பையா, நகராட்சி தலைவர் சாதிர் மற்றும் பலர் துவக்கி வைத்தனர். திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். 4 ரத வீதிகளிலும் வலம் வந்ததேர் மீண்டும் நிலையை அடைந்தது. நாளை (9ம் தேதி) காலை 8:20 மணி யானைப்பாலம் தீர்த்தவாரி மண்டபத்திற்கு அம்பாள் தவசுக்கு எழுந்தருளல், மாலை தெற்கு மாசி வீதியில் காசி விஸ்வநாதர் உலகம்மன் தவசு காட்சி அளித்தல் நடக்கிறது. தொடர்ந்து இரவு திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் முருகன் தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.