பதிவு செய்த நாள்
12
நவ
2023
12:11
மயிலாடுதுறை; மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தீபாவளி வாழ்த்து
ஒளி என்பது வெற்றியின் அடையாளம். தீபாவளிப் பண்டிகை தீமையின் வடிவமான நரகாசுரனை அழித்ததால் கொண்டாடப்படுகின்றது. அன்று அஞ்ஞானத்தின் வடிவமான இருளை அழித்து ; ஞான தீபங்களை ஏற்றுகின்றோம். இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் பிரசித்திப் பெற்ற சமயப்பண்டிகை தீபாவளி. நம் நாடு மட்டுமின்றி அண்டை நாடுகளான வங்காள தேசம், இலங்கை, மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் கொண்டாடப்படுகின்றது. தீபாவளி என்பதற்கு தீபங்களின் வரிசை என்று பொருள். ஸ்கந்த புராணத்தின் படி சக்தியின் 21 நாள் கேதார கௌரி விரதம் முடிந்தது இந்த தினத்தில் தான். விரதம் முடிந்த சக்தியை சிவன் தன்னில் ஒருபாதியாக ஏற்று அர்த்தநாரீஸ்வரர் ஆனார்.
தீபாவளி தினத்தன்று எண்ணை தேய்த்துக் குளித்தால் தீமைகள் விலகும், புண்ணியம் உண்டாகும். தீபாவளி தினத்தில் எண்ணைக்குளியல் செய்பவருக்கு கங்கையில் மூழ்கிக் குளித்த புனிதப்பயன் கிட்டும். இதனை தைலே லெட்சுமி; ஜல கங்கா என்று துலாபுராணம் குறிக்கின்றது. தீபாவளி தினத்தன்று குங்குமம், சந்தனம், மலர்கள், வெந்நீர், புத்தாடை, பட்டாசுகள்,காய்ச்சிய எண்ணெய், சிகைக்காய் பொடி, இனிப்புப் பண்டங்கள், இலேகியம், தீபம் வைத்து இறைவனை வழிபடுவர்.
எண்ணெயில் லெட்சுமி தேவியும், சிகைக்காய் பொடியில் சரஸ்வதியும், சந்தனத்தில் பூமாதேவியும், குங்குமத்தில் கௌரியும், புஷ்பத்தில் மோகினிகளும், வெந்நீரில் கங்கையும், புத்தாடைகளில் மகாவிஷ்ணுவும், இலேகியத்தில் தன்வந்திரியும், இனிப்புப் பண்டங்களில் அமிர்தமும் இருந்து அருள்பாளிப்பதாக ஐதீகம். இவ்வுலகைச் சூழ்ந்துள்ள கொரோனா அச்சம் விலகிட, இந்த தீபாவளி திருநாளில் மக்கள் அனைவரும் இறைவனை வணங்கி, ஒவ்வொருவர் மனதிலும் உள்ள அகங்காரம், பொறாமை, தலைக்கணம் என்னும் இருளை அகற்றி, வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையுடன், அரசு அறிவித்துள்ள சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடித்து இப்பண்டிகையை மகிழ்ச்சியோடு கொண்டாட எல்லாம் வல்ல ஸ்ரீசெந்தமிழ்ச் சொக்கநாத பெருமானின் திருவருளைச் சிந்திக்கின்றோம்.