பதிவு செய்த நாள்
13
நவ
2023
10:11
விரதம் எப்படி இருக்க வேண்டும்: சூரபத்மனை போரில் முருகப்பெருமான் வெற்றி பெற்றதையே கந்த சஷ்டியாக கொண்டாடுகிறோம். ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்துாரில் இந்நிகழ்வு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
ஐப்பசி வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரையான ஆறு நாட்களும் இதற்குரிய விரத நாட்கள். இந்நாட்களில் முழுவதுமாக விரதம் இருக்க வேண்டும். முடியாதவர்கள் இந்த ஆறு நாட்களில் சிறிதளவு பால், பழம், மிளகு சாப்பிட்டு, இளநீர் குடிக்கலாம். இதுவும் முடியாவிட்டால் முதல் ஐந்து நாட்களில் இரவில் பால், பழம் சாப்பிட்டு ஆறாம் நாளன்று முழுவதுமாக விரதம் இருக்க வேண்டும். இந்நாட்களில் கந்தசஷ்டி கவசம், கந்தரலங்காரம், கந்தரனுபூதி, கந்தர் கலிவெண்பா போன்ற நுால்களில் ஏதாவது ஒன்றை பாடுவது அவசியம்.மேற்சொன்னபடி விரதத்தை கடைபிடித்தால் முருகப்பெருமானின் அருளால் பாவம் ஓடி விடும்.
முருகா...முருகா...: நாம் முருகா... என்று அழைத்தாலே போதும். மும்மூர்த்திகளும் ஓடி வந்துவிடுவார்கள். மு என்றால் முகுந்தன்(பெருமாள்), ரு என்றால் ருத்ரன்(சிவன்), க என்றால் கமலன்(பிரம்மா) என மூவரது பெயரும் இதில் அடங்கியுள்ளது.
முருகா என்ற பெயருக்கு தெய்வத்தன்மை, அழகு, இளமை, மகிழ்ச்சி, மணம், இனிமை என்னும் ஆறுபொருள்கள் உள்ளன. முருகன், குமரன், குகன், ஆகிய மூன்று பெயர்களும் சிறப்பானவை. இதனை அருணகிரிநாதர், முருகன், குமரன், குகன் என்று மொழிந்து உருகும் செயல் தந்து உணர்வென்று அருள்வாய் என்று கந்தரநுபூதி பாடலில் குறிப்பிட்டுள்ளார். சஷ்டி விரதம் இருப்பவர்கள் மந்திரம், ஸ்லோகங்கள் சொல்ல முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. முருகா என்ற நாமத்தை இடைவிடாது ஜபித்தாலே போதும். அவரது அருள் கிடைத்துவிடும். இவர் குழந்தையாக இருந்தாலும் பெரியவர்களை போல் மன்னிக்கும் மனம் கொண்டவர். ராவணன், கம்சன் போன்ற அசுரர்கள் ராமன், கிருஷ்ணரால் வதம் செய்யப்பட்டார்கள். ஆனால் அசுரனான சூரபத்மனை வதம் செய்யவில்லை. அவனை மயிலாகவும், சேவலாகவும் மாற்றி வாகனம், கொடியாக ஏற்றுக் கொண்ட கருணை தெய்வம் அவர்.
ஆறும் ஆறுமுகனும்; முருகப்பெருமானுக்கும் எண் ஆறுக்கும் தொடர்பு அதிகம். இவருக்கு முகங்கள் ஆறு. இவரை வளர்த்தவர்கள் கார்த்திகைப் பெண்கள் ஆறுபேர். ஆறெழுத்து மந்திரத்திற்கு உரியவர். ஆறுபடை வீடுகளுக்கு சொந்தக்காரர். ஆறாம் திதியான சஷ்டியில், சூரசம்ஹாரம் செய்தவர் என ஆறுக்கும் ஆறுமுகனுக்கும் நெருக்கம் அதிகம். முருகனின் அடியவரான பாம்பன் சுவாமிகள் அருளிய குமாரஸ்தவம் என்னும் பாராயண நுாலில், ஓம் சஷ்டி பதயே நமோ நமஹ என உள்ளது. சஷ்டி தேவியின் தலைவனாக
விளங்கும் சண்முகப்பெருமானுக்கு வணக்கம் என்பது இதன் பொருள். தெய்வானையின் ஆறில் ஓர் அம்சமாக அவதரித்தவள் சஷ்டிதேவி. இதனால் தெய்வானைக்குரிய சஹஸ்ர நாமத்தில், ஓம் ஷஷ்ட்யை நமஹ, ஓம் ஷஷ்டீச்வர்யை நமஹ, ஓம் ஷஷ்டி தேவ்யை நமஹ எனும் மந்திரங்கள் உள்ளன.
ஓம் சரவணபவ; முருகப்பெருமானின் பிறப்புக்கு சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் தோன்றிய தீப்பொறிகள் கருவாக அமைந்தது. இதனால் இவர் அக்னி கர்ப்பன் ஆனார். அப்பொறிகள் கங்கையில் தவழ்ந்ததால் காங்கேயன் என பெயர் பெற்றார். சரவணப்பொய்கையில் வளர்ந்ததால் சரவணபவன் என அழைக்கப்பட்டார். இதையே நாம் ஆறெழுத்து மந்திரமாக ஓம் சரவணபவ என்று சொல்கிறோம். ஆறு தீப்பொறிகளும் ஆறு குழந்தைகளான மாறின. இவற்றை வளர்க்கும் பணியை கார்த்திகைப்பெண்கள் ஆறுபேர் செய்தனர். இதனால் இவர் கார்த்திகேயன் என பெயர் பெற்றார். தனது குழந்தையைக் காண வந்த பார்வதி அன்போடு குழந்தைகளை ஒன்று சேர்த்து அணைத்து மகிழ்ந்தாள். இதனால் ஆறுமுகமும் ஒன்றாகி கந்தன் ஆனார். கந்தன் என்றால் ஒன்றுசேர்ந்தவர் என்று பொருள்.
குழந்தை வரம் தரும் குழந்தை சுவாமி; எந்த வினையானாலும் கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது வாக்கு. அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் முக்கியமானது கந்தசஷ்டி விரதம். குழந்தை செல்வம் இல்லாதவர்கள் இந்த விரதத்தை மேற்கொண்டால் அந்த முருகப்பெருமானே குழந்தையாக வந்து பிறப்பார். இதைத்தான் சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பார்கள். அதாவது கந்த சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை உருவாகும். வசிஷ்ட முனிவரிடம் இருந்து இவ்விரதத்தை பற்றி அறிந்த முசுகுந்தச் சக்கரவர்த்தி, முனிவர்கள், தேவர்கள் என பலரும் கடைப்பிடித்துள்ளனர். செகமாயை உற்று என்று தொடங்கும் சுவாமிமலைத் திருப்புகழில் முருகனே குழந்தையாக வந்து பிறக்க வேண்டும் என்று அருணகிரிநாதர் வேண்டுகிறார். இந்த திருப்புகழை தினமும் பாராயணம் செய்தால் நல்ல குழந்தை கிடைக்கும்.
செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்ப ...... முடலுாறித்
தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
திரமாய ளித்த ...... பொருளாகி
மகவாவி னுச்சி விழியாந நத்தில்
மலைநேர்பு யத்தி ...... லுறவாடி
மடிமீத டுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி ...... தரவேணும்
முகமாய மிட்ட குறமாதி னுக்கு
முலைமேல ணைக்க ...... வருநீதா
முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்
மொழியேயு ரைத்த ...... குருநாதா
தகையாதெ னக்கு னடிகாண வைத்த
தனியேர கத்தின் ...... முருகோனே
தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
சமர்வேலெ டுத்த ...... பெருமாளே.