பதிவு செய்த நாள்
16
நவ
2023
03:11
சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக இன்று (16/11/2023)வியாழக்கிழமை மாலை நடைதிறக்கப்படுகிறது. கார்த்திகை மாதம் நாளை துவங்குகிறது சபரிமலை செல்லும் பக்தர்கள் பெரும்பாலும் நாளை மாலை அணிந்து தங்கள் விரதத்தை துவங்குவர். விரதமிருக்கும் பக்தர்கள் பம்பையில் இருந்து சிறிய பாதை வழியாகவும்,எரிமேலியில் இருந்து பெரிய பாதை வழியாகவும் செல்வர். இதில் பெரிய பாதை என்பது 48 கிலோமீட்டர் நீளமுள்ள நீண்ட நெடிய ஏற்ற இறக்கங்கள் கொண்டா மலைப்பாதையாகும். இந்தப் பாதை வழியாக இதுவரை 71 முறை பயணம் மேற்கொண்ட 70 வயதான ஐயப்ப பக்தரான கிரிதர் சுவாமியைப் பற்றியதுதான் இந்தக் கட்டுரை. தஞ்சாவூரைச் சேர்ந்த கிரிதர் சுவாமியான அவர் கூறுவதைக் கேளுங்கள் கானக வாசன், காந்தமலை ஜோதி, பாவ விநாசன், பாயஸப் பிரியன், ஸ்ரீசபரிமலை சாஸ்தா ஐயப்பனை நோக்கிச் செல்லும் புனிதப் பயணம் முடிவில்லாத ஒரு பேரின்பத்தைத் தரும். கடுமையான விரதமிருந்து காடு, மலை தாண்டிச் செல்லும் சபரிமலை யாத்திரை என்பது மனதுக்கு உற்சாகத்தையும் உடலுக்குப் பலத்தையும் அளிக்கக்கூடிய அற்புத அனுபவம் அடர்ந்த மரங்களும், அற்புத மூலிகைகளும், துள்ளிச்செல்லும் ஓடைகளும், நழுவிச்செல்லும் நதிகளும், மிரளச்செய்யும் வன விலங்குகளும், தலைக்கு மேலே இரையெடுக்க விரையும் பறவைகளின் கானங்களும் என இயற்கையின் எழிலார்ந்த சூழலில்தான் சபரிமலைக்கான பெரிய பாதை அமைந்திருக்கிறது. நாளுக்கு நாள் பெருகும் நவீனம் சிறிய பாதையை சிரமமில்லாமல் ஆக்கியுள்ளது ஆனால்,பெரிய பாதை ஐம்பது,அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி இருந்ததோ அப்படியேதான் இருந்து வருகிறது. கடந்த 1965 ஆண் ஆண்டு முதல் கடந்த 2022 ஆம் ஆண்டு வரை 71 முறை பெரிய பாதை வழியாகச் சென்றுள்ளேன் , 70 வயதாகும் நான் கணக்குப்படி 57 முறைதானே பெரிய பாதை வழியாகப் போயிருக்கமுடியும் என்று நீங்கள் நினைக்கலாம்,சில ஆண்டுகள் ஒன்றுக்கு மேற்பட்ட முறையில் பெரிய பாதையில் சென்றதால்தான் இந்தக்கணக்கு என்றார். இப்போது இந்த வருடம் 72 வது முறையாக பெரிய பாதையில் செல்கிறார்.இன்னும் ஒரு விசேசம் என்னவென்றால் இவர் தான் மலை அணிந்து கொள்ளும் அம்பாசமுத்திரம் பிருந்தாவன் கோவிலில் இருந்து சபரிமலை வரை உள்ள 200 கி.மீட்டர் துாரத்தையும் நடந்தே கடக்க உள்ளார். கிரிதர்சாமியின் ஐயப்பன் கோவில் பயணம் என்பது அவரது 11 வயதில் ஆரம்பித்தது, அதன்பிறகு தொய்வின்றி தொடர்கிறது..கிரிதர்சுவாமியுடன் சேர்ந்து ஆணும்,பெண்ணுமாக சுமார் 70 பேர் வரை இப்போது இந்த பெருவழிப்பயணத்தில் கலந்து கொள்கின்றனர்.இதற்காக ஸ்விட்சர்லாந்தில் இருந்தெல்லாம் பக்தர்கள் வருகிறார்கள்.இவரது குழு பழமையையும் போற்றும் புதுமையையும் வரவேற்கும்.சாஸ்திர சம்பிரதாயம் என்ற பெயரில் குழுவில் உள்ளவர்களை பெரிதும் வருத்துவதில்லை.ஐயப்பன் ஏன் நெய்யாபிசேக பிரியர் என்றால் நெய் மிகவும் பரிசுத்தமானது என்பதால்,அந்த பரிசுத்த தன்மையை உனக்குள் வளர்த்துக்கொள் எதுவும் சாத்தியமே என்பதே கிரிதர்சாமியின் கொள்கை. பெரியபாதை பாதயாத்திரை குழுவில் உள்ள 70 பேரும் பல்வேறு ஊர்களில், நாடுகளில் இருப்பவர்கள் அவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட தேதியில்,கிரிதர்சாமியின் பெற்றோர் ராஜகோபால்-சுசீலா ஆகியோர் அம்பாசமுத்திரத்தில் ஏற்படுத்தியுள்ள பாண்டுரங்கன் குடியிருக்கும் பிருந்தாவனத்தில் இருந்துதான் இருமுடி கட்டிக்கொண்டு கிளம்புவர்.அங்கு இருந்து எரிமேலிக்கு ரயிலில் சென்றுவிட்டு பின் அங்கு இருந்து பெரியபாதையில் கிளம்பிச்செல்வர். இந்த வருடம் பெரிய பாதையில் செல்லக்கூடிய சென்னை பக்தர்கள் வீட்டில் கடந்த வாரம் சத்சங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் கலந்து கொண்டு பஜனை பாடல்கள் பாடி மகிழ்ந்தனர்.
கிரிதர்சாமியின் எண்:94451 14286. -எல்.முருகராஜ்