பதிவு செய்த நாள்
16
நவ
2023
04:11
மேட்டுப்பாளையம்: குருந்தமலை குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில், புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெற உள்ளதை அடுத்து, திருப்பணிகள் ஜரூராக நடைபெறுகின்றன.
காரமடை அருகே குருந்தமலையில், மிகவும் பிரசித்தி பெற்ற, பழமையான குழந்தை வேலாயுத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள, பெரிய தேர், தேரோட்டத்திற்கு உபயோகப்படுத்த முடியாது என, ஹிந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்தது. இதை அடுத்து புதிதாக தேர் செய்ய நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடுகள் செய்தது. உபயதாரர்கள் உதவியுடன், இலுப்பை, தேக்கு ஆகிய இரண்டு வகை மரங்களால், தேர் செய்து முடிக்கப்பட்டது. பதினொன்னே முக்கால் அடி உயரம், பன்னிரண்டேகால் அடி அகலத்தில் தேர் செய்யப்பட்டுள்ளது. இதில் மொத்தமாக, 148 சிற்ப சிலைகள் மரத்தில் செதுக்கப்பட்டுள்ளன. மூன்று நிலை தேரில், கோவில் தல வரலாறு, சிவபுராணம், கந்தபுராணம், விஷ்ணு புராணம் ஆகியவற்றின் சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன. புதிய தேர் வெள்ளோட்டம் குளித்து ஆலோசனைக் கூட்டம், குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கோயில் செயல் அலுவலர் லோகநாதன் தலைமை வகித்தார். தேர் உபயதாரர்கள், கிட்டாம்பாளையம், புங்கம்பாளையம், தேக்கம்பட்டி, செல்லப்பனூர், அரசப்பனூர், ஆகிய ஐந்து கிராமங்களைச் சேர்ந்த, மிராசுதாரர்கள், பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில், வருகிற, 23ம் தேதி புதிதாக செய்த தேர் வெள்ளோட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இவ்விழாவில் மூன்று கால யாக வேள்வி பூஜைகளும், அதை தொடர்ந்து, ஸ்தபதி பூஜையும் செய்த பின், காலை, 10:00 மணிக்கு புதிய தேர் வெள்ளோட்டம் நடை பெற உள்ளது. திருப்பணிகள் அனைத்தும், துரிதமாக செய்து முடிக்க, கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. கோவிலில் அனைத்து திருப்பணிகள், கான்கிரீட் தளம் அமைத்தல், தேர் செல்லும் சாலைகள் விரிவாக்கம் செய்தல் ஆகிய பணிகளை, சுப்பையன், ராஜேந்திரன், செல்வக்குமார், ராஜப்பன், கோவிந்தராஜ் மற்றும் கோவில் பணியாளர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.