இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கோவிலுக்குள் நுழைய எதிர்ப்பு; பாரம்பரியம் பாதிக்கப்படும் என கிராம மக்கள் முற்றுகை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16நவ 2023 06:11
திருமங்கலம்; திருமங்கலம் தாலுகா சாத்தங்குடியில் கிராம மக்களுக்கு பொதுவான பழமையான கோவிலுக்குள் நுழைவதற்கு இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் முற்றுகையில் ஈடுபட்டனர்.
சாத்தங்குடி கிராமத்தில் ஊர் பொதுமக்களுக்கு பாத்தியப்பட்ட விநாயகர், பெருமாள், மாரியம்மன் கோவில்கள் உள்ளன. 300 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இந்த கோயிலில் வருடம் தோறும் புரட்டாசி மாதம் திருவிழா நடப்பது வழக்கம். திருவிழாவின் போது 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொள்வர். இந்த கோவிலில் 200 ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட விநாயகர், பெருமாள், மாரியம்மன் சாமிகளின் உலோக சிலைகள் உள்ளன. இவற்றை கிராம மக்கள் பாதுகாத்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இந்த கோவிலை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டதாகவும், ஆனால் திருவிழாவை கிராம மக்கள் நடத்துவதாகவும் கூறிய இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நேற்று இந்த கோவிலுக்குள் பாதுகாப்பு அறை அமைப்பதற்காக முயற்சி எடுத்துள்ளனர். இதற்கான சமாதான கூட்டம் நேற்று திருமங்கலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., சாந்தி தலைமையில் நடந்தது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமத்தில் ஒரு தரப்பினர் செல்லவில்லை. இதனால் எந்த முடிவும் எடுக்கப்படாமல் சமாதான கூட்டம் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் நேற்று அவசரம் அவசரமாக இந்த கோவிலுக்குள் இரும்பு பெட்டகத்தை வைக்க வேண்டும் என கூறி போலீஸ் பாதுகாப்போடு அறநிலையத்துறை அதிகாரிகள் வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவிலுக்குள் யாரையும் நுழைய விடாமல் 1000 பெண்கள் உள்ளிட்ட 1500 பேர் கோவில் முன்பு அமர்ந்தனர். அவர்களிடம் டி.எஸ்.பி., வசந்தகுமார் அறநிலையத்துறை செயல் அலுவலர் அங்கையர் கன்னி, உதவி பொறியாளர் நிர்மலா தேவி, ஆய்வாளர் சாந்தி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அறநிலையத்துறை அதிகாரிகளை கோவிலுக்குள் விட மறுத்ததோடு தங்களது கிராம செலவில் பாதுகாப்பு பெட்டகத்தை அமைத்துக் கொள்வதாகவும் கூறினர். இதனால் அதிகாரிகளின் முயற்சி தோல்வி அடைந்தது. மீண்டும் ஒரு வாரம் கழித்து இது குறித்து பேசி முடிவெடுத்துக் கொள்ளலாம் என கூறி அதிகாரிகள் கலைந்து சென்றனர். இது குறித்து கிராம மக்கள் கூறும்போது : 300 ஆண்டுகளாக இந்த கோவிலை நாங்கள் பாதுகாத்து வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக திருவிழா கொண்டாடி வருகிறோம். ஆனால் இந்த கோவிலுக்குள் தற்போது அறநிலையத்துறை அதிகாரிகள் நுழைந்தால் தங்களது பாரம்பரியம் பாதிக்கப்படும் என்றனர்.