பதிவு செய்த நாள்
17
நவ
2023
03:11
திருவண்ணாமலை; ‘‘திருவண்ணாமலையில், அண்ணாமலையார் மலை உச்சிக்கு சென்று, மஹா தீபம் தரிசனம் செய்ய, 2,500 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவர்,’’ என, மாவட்ட கலெக்டர் முருகேஷ் கூறினார்.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் தீப திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து, ஆய்வு கூட்டம் நடந்தது. அமைச்சர்கள் வேலு, சேகர்பாபு, கலெக்டர் முருகேஷ் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் அமைச்சர்கள் கூறியதாவது: வரும், 26 ல் அதிகாலை, 4:00 மணிக்கு ஏற்றப்படும் பரணி தீபம், மாலை, 6:00 மணிக்கு ஏற்றப்படும் மஹா தீபத்தை கோவிலினுள் சென்று தரிசனம் செய்ய முடியாதவர்கள், வெளிப்பகுதியில் காணும் வகையில், 4 கோபுரங்கள் முன்புறம் மற்றும் 13 தற்காலிக பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட, 20 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தீப திருவிழா செலவீனங்களுக்காக முன்பணமாக, நகராட்சிக்கு, 50 லட்சம் ரூபாய், உள்ளாட்சி துறைக்கு, 50 லட்சம் ரூபாய் அரசு சார்பில், கடந்த, 8ம் தேதி வழங்கப்பட்டுள்ளது. வரும், பரணி தீபம் மற்றும் மஹா தீபம் காண, வரும், 24 ம் தேதி அன்று காலை, 10:00 மணிக்கு ஆன்லைன் மூலம், 500 நபர்களுக்கு டிக்கெட் வழங்கப்படும். Httts:/annamalayar.hrce.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் பெறலாம். பாதுகாப்பு பணிக்காக, கோவில் வளாகம், மாட வீதி, கிரிவலப்பாதை உள்ளிட்ட இடங்களில், 623 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 4 அடுக்கு பாதுகாப்பு பணியில், 13 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். விழாவில், சிறப்பு பணி அலுவலர்கள், கோவில் பணியாளர்கள், பிற துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோருக்கு போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. பரணி தீபம் மற்றும் மகா தீபம் காண, உள்ளே செல்லும் உபயதாரர்கள், கட்டளைதாரர்கள் ஆகியோருக்கு, சிப் பொருத்தப்பட்ட அனுமதி சீட்டு வழங்கப்பட உள்ளது. ஸ்கேன் செய்யப்பட்ட பின்னரே, அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு கூறினர்.
கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் முருகேஷ் கூறுகையில், ‘‘மஹா தீப நாளில், 2,668 அடி உயர மலை உச்சிக்கு சென்று மஹா தீபம் தரிசனம் செய்ய, 2,500 பக்தர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும்,’’ என்றார்.