திருச்செந்தூரில் திருக்கல்யாணம் கோலாகலம்; மொய் எழுதி பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20நவ 2023 10:11
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் சுவாமி குமரவிடங்க பெருமான் தெய்வானை அம்மன் தோள் மாலை மாற்றும் நிகழ்வு நேற்று மாலை நடந்தது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 13ம் தேதி யாகசாலையுடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று முன்தினம் மாலையில் நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கந்தசஷ்டி விழாவில் முருகப்பெருமான் தெய்வானை அம்மன் திருக்கல்யாணம் நேற்று இரவு நடந்தது. முன்னதாக காலை 5:00 மணிக்கு தெய்வானை அம்மன் தபசு காட்சிக்கு எழுந்தருளி தெப்பக்குளம் அருகே முருகா மடத்தை சேர்ந்தார். மாலையில் சுவாமி குமரவிடங்க பெருமான் மாப்பிள்ளை கோலத்தில் தனி சப்பரத்தில் எழுந்தருளி தெய்வானை அம்மனுக்கு காட்சி கொடுத்தார். மாலை 6.30 மணிக்கு தெற்கு ரதவீதி மேலரதவீதி சந்திப்பில் சுவாமி அம்மன் தோள் மாலை மாற்றும் நிகழ்வு நடந்தது. சுவாமியை அம்மன் மூன்று முறை வலம் வந்ததும் தோள் மாலை மாற்றப்பட்டது. பின்னர் சுவாமி அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். சுவாமி, அம்மன் கோயிலை அடைந்தனர். நள்ளிரவு ராஜகோபுர வாசலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி அம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. திருக்கல்யாணத்தையொட்டி பக்தர்கள் மொய் எழுதி பிரசாதம் பெற்றுச் சென்றனர். ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் கார்த்திக் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் உள்ளிட்ட அறங்காவலர்கள் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.