தருமபுரம் ஆதீனம் 26வது குருமகா சந்நிதானத்தின் 4ம்ஆண்டு குருபூஜை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20நவ 2023 05:11
மயிலாடுதுறை; மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் 26வது குருமகா சந்நிதானத்தின் 4ம்ஆண்டு குருபூஜை விழா நடந்தது.
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தின் 26வது குருமகா சன்னிதானமாக 48 ஆண்டுகள் ஞானபீடத்தில் அமர்ந்து அருளாட்சி செய்த ஸ்ரீலஸ்ரீ சண்முகதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கடந்த 2019ம் ஆண்டு பரிபூரணம் அடைந்தார். அவருக்கு ஆனந்தபரவசர் பூங்காவில் குருமூர்த்தம் அமைக்கப்பட்டு வழிபாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 4ம் ஆண்டு குருபூஜை விழாவையொட்டி தருமை ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் 26வது குருமகா சந்நிதானத்தின் குருமூர்த்தத்திற்கு எழுந்தருளி சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்து வழிபாடு நடத்தினார். தொடர்ந்து அனைத்து குருமூர்த்தங்களிலும் வழிபாடு நடத்தி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். திருச்சி மலைக்கோட்டை திருமுறைக்கலாநிதி பாலசுப்ரமணிய ஓதுவாருக்கு நற்சான்றிதழ் மற்றும் பதினோராயிரம் ரூபாய் பொற்கிழி வழங்கினார். நான்காம் ஆண்டு குருபூஜையையொட்டி 27வது குருமகா சன்னிதானம் அருளிய உன்னை நினைத்தே கழியும் என் ஆவி என்ற நூலை குருமகா சன்னிதானம் வெளியிட லண்டன் முருகன்கோயில் பிரதான அர்ச்சகர் மணல்மேடு நாகநாதசிவாச்சாரியார் பெற்றுக்கொண்டார். இதில் திருநாவுக்கரசு தம்பிரான்சுவாமிகள், மாணிக்கவாசக தம்பிரான் சுவாமிகள், சிவகுருநாததம்பிரான்சுவாமிகள், சட்டநாதம் பிரான் சுவாமிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.