புட்டபர்த்தியை புனிதப்படுத்தியவர் சத்ய சாய்பாபா; பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22நவ 2023 09:11
புட்டபர்த்தி: மாணவர்களிடம் உண்மை, பாசம், அகிம்சை ஆகியவற்றை புகுத்துவது ஒருங்கிணைந்த கல்வியின் குறிக்கோள் என ஸ்ரீசத்ய சாய் உயர் கல்வி நிறுவன பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசினார்.
ஜனாதிபதி திரௌபதி முர்மு இன்று சத்ய சாய் உயர்கல்வி நிறுவனத்தின் 42வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்றார். கடந்த 41 ஆண்டுகளாக ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 98வது பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு ஒரு நாள் முன்னதாக பட்டமளிப்பு விழா நடைபெற்று வருகிறது. சத்ய சாய் மத்திய அறக்கட்டளை உறுப்பினர்கள் கடந்த மாதம் ஜனாதிபதியை பட்டமளிப்பு விழாவிற்கு அழைத்திருந்தனர். இன்று ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் உயர்கல்வி நிறுவனத்தின் 42வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பட்டங்களை வழங்கினார். முன்னதாக மேடைக்கு வந்த அவரை கே சக்ரவர்த்தி ஐஏஎஸ் (ஓய்வு) மற்றும் துணைவேந்தர் பேராசிரியர் பி ராகவேந்திர பிரசாத் மற்றும் ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர் ஜே ரத்னாகர் ஆகியோர் வரவேற்றனர். அதைத் தொடர்ந்து தைத்திரிய உபநிடதத்திலிருந்து வேத மந்திரம் முழங்க விழா துவங்கியது.
இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு பேசியதாவது; புட்டபர்த்தியை புனிதப்படுத்திய ஒரு சிறந்த ஆளுமை ஸ்ரீ சத்ய சாய். அவருடைய ஆசீர்வாதத்தால் மக்கள் பயனடைந்துள்ளனர், தொடர்ந்து பயனடைவார்கள். அத்தகைய ஆளுமைகளின் கல்வியின் கருத்து நமது சிறந்த பாரம்பரியங்களை உயிர்ப்பிக்கிறது. ஒவ்வொரு மாணவரிடமும் உண்மை, நன்னடத்தை, அமைதி, பாசம் மற்றும் அகிம்சை ஆகியவைகளை புகுத்துவது ஒருங்கிணைந்த கல்வியின் முக்கிய குறிக்கோள். ஸ்ரீ சத்ய சாய் உயர்கல்வி நிறுவனம் மனித மற்றும் ஆன்மிக விஷயங்களுக்கு அடிப்படை முக்கியத்துவம் அளிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். விழாவில் ஆந்திரா கவர்னர் அப்துல் நசீர், பல்கலை வேந்தர் சக்கரவர்த்தி, துணைவேந்தர் ராகவேந்திர பிரசாத், ஆந்திரா அமைச்சர் உஷா ஸ்ரீ சரண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஜனாதிபதியின் புட்டபர்த்தி வருகையையொட்டி, விமான நிலையம் மற்றும் பட்டமளிப்பு விழா நடைபெறும் இடமான பிரசாந்தி நிலையம் செல்லும் சாலை உள்ளிட்ட இடங்களில் சத்ய சாய் மாவட்ட போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.