பதிவு செய்த நாள்
26
நவ
2023
04:11
பந்தலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் சுற்றுவட்டார பகுதி குடியிருப்புகள் மற்றும் மளிகை கடைகளில், கதவுகளை உடைத்து சமையல் எண்ணெய் உள்ளிட்ட உணவு பொருட்களை ருசித்து வருகிறது.
கரடியை பிடிப்பதற்காக பல்வேறு இடங்களில் கூண்டுகள் வைத்து, அதனால் சமையல் எண்ணெய், தேன் மற்றும் கரடி விரும்பி உண்ணும் உணவுப் பொருட்களை வைத்து வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் கூண்டுக்குள் சிக்காத கரடி நேற்று முன்தினம் இரவு பந்தலூர் அருகே அத்திக்குன்னா மாரியம்மன் கோவிலுக்குள் வந்த கரடி அங்கு ஊற வைத்திருந்த கொண்டைக்கடலை பாத்திரத்தை எடுக்க முயற்சி செய்துள்ளது. பாத்திரத்தின் மீது பெரிய பலகையை வைத்திருந்ததால், அதனை ஒன்றும் செய்யாமல் சென்றுள்ளது. பின்னர் அத்திமா நகர் கிராமத்திற்கு வந்த கரடி, இங்குள்ள மாரியம்மன் கோவில் கருவறை கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளது. கருவறைக்குள் வைத்திருந்த 20 லிட்டர் நல்லெண்ணையை ருசித்துள்ளது.
காலையில் கோவிலுக்கு வந்த அர்ச்சகர் இதனை பார்த்து பொதுமக்கள் மற்றும் வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும் காலை ஏழு மணிக்கு கிராமத்தை ஒட்டிய தேயிலை தோட்டம் வழியாக நடந்து சென்றதையும் பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் பார்த்துள்ளனர். இப்பகுதியில் பந்தலூர் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, வனச்சரகர் சஞ்சீவி, வி.ஏ.ஓ. அசோக் குமார், வனவர்கள் பாலகிருஷ்ணன் மற்றும் சுரேஷ்குமார் உள்ளிட்ட வனக் குழுவினர் ஆய்வு செய்து, இந்தப் பகுதியிலும் ஒரு கூண்டு வைத்து, கரடி விரும்பி உண்ணும் உணவுகளை வைத்து கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். கரடி கூண்டுக்குள் செல்லாத நிலையில் அதனை பிடிப்பதற்கு வனத்துறையினர் மாற்று நடவடிக்கையை மேற்கொண்டு கரடியை பிடிக்கவும், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும் தாசில்தார் அறிவுறுத்தினார்.