திருக்கார்த்திகையில் மண் மலையான விநோத திருவிழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26நவ 2023 04:11
மேலுார்: மேலுார், நரசிங்கம்பட்டியில் திருக்கார்த்திகையை முன்னிட்டு மண் மலையான விநோத திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நரசிங்கம்பட்டி பெருமாள் மலையடிவார கோயிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு திருவிழா நடைபெற்றது. இவ் விழாவில் பக்தர்கள் மழை பெய்து விவசாயம் செழிக்கவும், நோய் நொடியில்லாமல் வாழ வேண்டி நரசிங்கம்பட்டி, வெள்ளரிப்பட்டி உள்ளிட்ட ஏராளமான கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயில் முன் உள்ள ஓடையில் புனித நீராடினார். பிறகு அங்கிருந்து ஒரு பிடி மணலை எடுத்து வந்து கோயில் முன் போட்டு வழிபாடு செய்தனர். இவ்வாறு ஆண்டு தோறும் பக்தர்கள் போட்ட மணல் இன்று மலை போல் குவிந்துள்ளது. இம் மண் மலையை மூன்று முறை சுற்றி வந்த பக்தர்கள் உப்பு, மிளகு போன்றவற்றை நேர்திக்கடனாக செலுத்தி வழிபட்டனர். குழந்தை பாக்கியம் வேண்டி கிடைக்க பெற்றவர்கள் தங்களது குழந்தையை கரும்பு தொட்டிலில் கட்டி வந்து முடிகாணிக்கை செலுத்தினர். இதே போல் சோமகிரி மலையாடிவாரத்தில் உள்ள மேலவளவு கருப்பு கோயிலுக்கு வந்த பக்தர்கள் மலை மீது ஏறி கற்களை வீசியும், விளக்கு ஏற்றியும் வழிபட்டனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் அரிவாளை காணிக்கையாக செலுத்தினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.