மூணாறு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26நவ 2023 04:11
மூணாறு: மூணாறில் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை திருவிழா வெகுசிறப்பாக நடந்தது. இந்த கோயிலில் பழநி தண்டாயுதபாணி கோயிலில் நடக்கும் பூஜை உள்பட ஐதீகங்கள் தவறாமல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி ஆண்டுதோறும் கார்த்திகை திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். நேற்று கார்த்திகை திருவிழா வெகுசிறப்பாக நடந்தது. பழைய மூணாறில் உள்ள பார்வதி அம்மன் கோயிலில் இருந்து காலையில் பால் குடம் எடுத்து வரப்பட்டு முருகன், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகம் நடந்தது. அதன்பிறகு பல்வேறு சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடந்தன. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகனை தரிசித்தனர். கோயிலில் பஜனை பாடல் உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பறவை காவடி உள்பட பல்வேறு விதங்களில் பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். மாலையில் கோயில் அருகில் உள்ள மலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. கோயில் சார்பில் நாள் முழுவதும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் நடந்த தேர் பவனியில் உற்சவ மூர்த்தி முருகன், வள்ளி, தெய்வானையுடன் அருள் பாலித்தார்.