பதிவு செய்த நாள்
30
நவ
2023
03:11
அன்னூர்; அன்னூரில் உள்ள பழமையான பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்துக்கு இந்து சமய அறநிலையத்துறை அனுமதி மறுத்ததால் கும்பாபிஷேகம் ஒத்திவைக்கப்பட்டது.
அன்னூரில், 400 ஆண்டுகள் பழமையான கரி வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு 14 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதையடுத்து பல லட்சம் ரூபாய் செலவில் முன் மண்டபம், தோரணவாயில், 12 ஆழ்வார்கள் சன்னதி, பிரகாரம் அகலப்படுத்துதல் ஆகிய திருப்பணிகள் முடிக்கப்பட்டன. கும்பாபிஷேகத்துக்கு அனுமதி கோரி திருப்பணி குழு கடந்த மாதம் இந்து சமய அறநிலையத் துறைக்கு விண்ணப்பித்தது. வருகிற 1ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டு, அழைப்பிதழ் அச்சடித்து அனைத்து பணிகளையும் செய்து முடித்திருந்தது. இந்நிலையில் நேற்று மாலை இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் இருந்து பணிகளை முழுமையாக முடித்து விட்டு வேறு தேதியில் நடத்திக் கொள்ளுங்கள் என்று தெரிவித்தனர். இதையடுத்து பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். நேற்று முன்தினம் பவானி முக்கூடலில் இருந்து தீர்த்த குடங்கள் கொண்டு வரப்பட்டன. நேற்று முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. இந்நிலையில் அறநிலையத்துறை உத்தரவு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து திருப்பணி கமிட்டியினர் கூறுகையில், அனைத்து பணிகளையும் முழுமையாக முடித்து விட்டோம். எனினும் இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் அனுமதி தராதது வருத்தம் அளிக்கிறது. அதிகாரிகள் அனுமதி அளிக்கும் வேறு தேதியில் கும்பாபிஷேகம் நடைபெறும், என்றனர். இணை ஆணையர் ரமேஷ் கூறுகையில்," கும்பாபிஷேகத்திற்கு அனுமதி தர மாநில கமிட்டி, மண்டல கமிட்டி என இரு கமிட்டிகள் உள்ளன. இந்த கமிட்டிகளின் வழிகாட்டுதலை திருப்பணி குழு பின்பற்றவில்லை. பணிகள் முழுமையாக முடிக்கவில்லை. மீண்டும் கமிட்டி ஆய்வுக்குப் பிறகு அனுமதி அளிக்கப்படும்," என்றார்.
கோவை வடக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் சங்கீதா வெளியிட்டுள்ள அறிக்கை : அரசிடம் இருந்து ஒரு ரூபாய் கூட பெறாமல் பக்தர்கள் தாங்களாக வழங்கிய பல லட்சம் ரூபாயில் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. முறையாக ஒரு மாதத்திற்கு முன்பே விண்ணப்பித்துள்ளனர். ஆனாலும் அரசு கும்பாபிஷேகத்துக்கு அனுமதி தராமல் இந்து விரோத போக்கை கடைபிடித்துள்ளது. இது கடும் கண்டனத்துக்குரியது. இது குறித்து கட்சி தலைமைக்கு தகவல் தெரிவிக்கப்படும். விரைவில் அனுமதி வழங்காவிட்டால் மாவட்ட அளவில் அன்னூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.