பதிவு செய்த நாள்
02
டிச
2023
10:12
செந்துறை; நத்தம் அருகே செந்துறை-குரும்பபட்டியில் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் நேற்று முன்தினம் கணபதி ஹோமம், ஸ்ரீ லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூரணாகுதி,தீபாராதனை, முதல் மற்றும் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மூன்றாம் காலயாக பூஜைகளை தொடர்ந்து மேளதாளம் முழங்க ஏற்கனவே யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த அழகர்மலை, கரந்த மலை, காசி, ராமேசுவரம், வைகை, உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்த குடங்கள் ஊர்வலமாக கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க புனித தீர்த்தம் குடம் குடமாக ஊற்றப்பட்டு பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தது. இதில் கோயிலை சுற்றி ஏராளமான பக்தர்கள் நின்று கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அப்போது வானத்தில் கருடன்கள் வட்டமிட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு பூஜை மலர்களும், புனித தீர்த்தமும், அறுசுவை உணவு அன்னதானமும் வழங்கப்பட்டது. விழாவில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ., நத்தம் ஒன்றியக்குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை செந்துறை வட்டார ஐயப்ப சேவா சங்கம் மற்றும் குரும்பபட்டி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.