அங்காளம்மன் கோயிலில் இறந்த பசுவுக்கு சிலை வைத்து வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03டிச 2023 10:12
மயிலாடுதுறை; சீர்காழி அருகே அங்காளம்மன் கோயிலில் இறந்த பசு மாட்டுக்கு சமாதியுடன் கூடிய சிலை வைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா ஆச்சாள்புரம் கிராமத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த அங்காளம்மன் கோயில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் வெள்ளி, செவ்வாய் ஆகிய வார நாட்களிலும் பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இக்கோயிலில் பசு மாடு ஒன்று வளர்க்கப்பட்டது. சிறப்பு பூஜை நாட்களில் பசுவுக்கு கோ பூஜை நடத்தப்படும். இப்பசுமாடு தரும் பாலை கொண்டு அம்மனுக்கு காலை மாலை ஆகிய இரு வேளைகளிலும் அபிஷேகம் செய்து வந்தனர். லெட்சுமி என்ற பெயரிட்டு செல்லமாக அழைத்து வந்தனர். இந்நிலையில் வயது முதிர்வின் காரணமாக உடல் நலம் குன்றி காணப்பட்ட லட்சுமி இரு தினங்களுக்கு முன்பு இறந்துவிட்டது. இதனை அறிந்த பக்தர்கள் கோயிலுக்கு வந்து சமாதி எழுப்பி அடக்கம் செய்து சமாதியின் மேல் பசுவுடன் கூடிய கன்றும் சேர்த்து சிலை வைப்பதாக முடிவு செய்தனர். தொடர்ந்து சமாதி அமைக்கப்பட்டு பசு அடக்கம் செய்யப்பட்டு சமாதி மேல் கன்றுடன் கூடிய பசுவின் சிலை அழகாக வைக்கப்பட்டு தத்ரூபமாக காட்சி அளிக்கிறது. அதனை தொடர்ந்து பசு சிலைக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.