திருவெண்காடு கோவிலில் துர்கா ஸ்டாலின் பால்குடம் எடுத்து வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03டிச 2023 11:12
மயிலாடுதுறை; திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் அகோர மூர்த்திக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா பால்குடம் எடுத்து வழிபாடு நடத்தினார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருவெண்காடு கிராமத்தில் தேவார பாடல் பெற்ற பிரமவித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற ஆதிசிதம்பரம் என்று போற்றப்படும் இக்கோவிலில் நவகிரகங்களில் புதன் பகவான் தனி சன்னதியில் எழுந்தருளி உள்ளார். இத்தலத்தில் மருத்துவாசுரனை அடக்குவதற்காக சிவபெருமானின் ஈசானிய முகத்திலிருந்து தோன்றிய அகோரமூர்த்தி தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். அகோரமூர்த்திக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். அதில் கார்த்திகை மாத மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அகோரமூர்த்திக்கு அபிஷேகம் செய்வார்கள். இத்தகைய சிறப்புமிக்க கார்த்திகை மாத மூன்றாம் ஞாயிற்றுக்கிழமையான இன்று மாலை கோவிலுக்கு வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா சூரிய தீர்த்தக் கரையிலிருந்து பால்குடம் எடுத்து கோவில் பிரகாரத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நடைபாதையின் வழியே கோவிலை வலம் வந்து அகோரமூர்த்திக்கு அபிஷேகம் செய்தார். பூஜைகளை பாபு குருக்கள் தலைமையிலானோர் செய்து வைத்தனர். துர்கா ஸ்டாலின் வருகை முன்னிட்டு கோவில் வளாகத்தில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிகழ்ச்சியில் துர்கா ஸ்டாலின் உறவினர்கள், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம், கோவில் செயல் அலுவலர் முருகன் மற்றும் திமுக பிரமுகர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மங்கள வாத்தியம் இசைக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூரிய தீர்த்தத்தில் இருந்து பால்குடம் மற்றும் காவடிகள் எடுத்து நான்கு மாட வீதிகளையும் வலம் வந்து அகோரமூர்த்திக்கு அபிஷேகம் செய்தனர்.