பதிவு செய்த நாள்
05
டிச
2023
05:12
பல்லடம்; திருப்பணி நடந்து வரும் மாதப்பூர் முத்துக்குமார சுவாமி கோவில், கும்பாபிஷேகத்துக்கு ஆயத்தமாகி வருகிறது.
பல்லடம் அடுத்த, மாதப்பூர் முத்துக்குமார் சுவாமி கோவில், குன்றின் மேல் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோவிலாகும். நூற்றாண்டுகள் பழமையான கோவிலுக்கென வரலாறும் உண்டு. ஞானப்பழம் கிடைக்காததால் பெற்றோரிடம் கோவித்துக் கொண்டு பழனி சென்ற முருகப்பெருமான், இங்குள்ள குன்றின் மீது அமர்ந்து காட்சியளித்ததாக கூறப்படுகிறது. இங்கு, முத்துக்குமார சுவாமி மூலவராகவும், மகிமாலீஸ்வரர், மரகதாம்பிகை உட்பட, தக்ஷிணாமூர்த்தி, சனி பகவான், நவக்கிரகங்கள் மற்றும் கால பைரவர் ஆகியோர் பரிவார தெய்வங்களாகவும் அருள்பாலிக்கின்றனர். ஹிந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோவில், பல ஆண்டுக்குப் பின் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு, திருப்பணிகள் துவங்கி நடந்து வருகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோவிலுக்குள் நுழைந்து மற்றொரு வழியில் வெளியேறும் வகையில், பிரத்யேக வழித்தடம் உருவாக்கப்பட்டுள்ளது. கோவை- திருச்சி மெயின் ரோட்டில், கோவில் இருப்பதை தெரியப்படுத்தும் வகையில், நுழைவு வாயில் அமைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பல்வேறு திருப்பணிகளுடன், கும்பாபிஷேக விழாவுக்கு கோவில் தயாராகி வருகிறது.