பதிவு செய்த நாள்
05
டிச
2023
05:12
திருப்பரங்குன்றம்; மதுரை திருமங்கலம் அருகே திரளி கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமையான ஐந்து போர் வீரர்களுக்கான ஆண் சிலைகளும், ஐந்து புதிய கல்வெட்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி வரலாற்று துறை உதவி பேராசிரியர்கள் பிறையா, ராஜகோபால், சமூக ஆர்வலர் அஸ்வத், கல்லூரி வரலாற்றுத் துறை முன்னாள் மாணவர் கார்த்திக்மணி ஆகியோர் அடங்கிய குழுவினர், தரையின் மேற்பரப்பில் பரவிக்கிடக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க பழங்காலத்து கல்வெட்டுக்கள் தொடர்பாக கள ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் திருமங்கலம் ஆலங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட திரளி கிராமத்தில் கள ஆய்வு செய்தனர். அப்பொழுது மூன்று நடு கற்கள் விவசாய நிலத்தில் பாதி புதைந்தும், பாதி வெளியே நீண்டும் இருப்பதை கண்டு பிடித்தனர். இக்கல்வெட்டுக்களை படி எடுத்து ஆய்வு மேற்கொண்டனர்.
உதவி பேராசிரியர்கள் பிறையா, ராஜகோபால் கூறியதாவது: நடு கற்களை ஆராய்ந்த போது ஒவ்வொரு நடு கல்லின் கீழும் தமிழ் எழுத்துக்கள் பிழையுடன் பொறிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அனைத்து நடு கற்களும் மேற்கு நோக்கி வைக்கப்பட்டுள்ளன. தெற்கு புறத்தில் வைக்கப்பட்டுள்ள முதலாவது நடு கல்லில், கிழக்குத் திசை தவிர, மற்ற மூன்று திசைகளிலும் போர் வீரர் சிற்பங்கள் செதுக்கப்பட்டு இருக்கின்றன. இந்த நடு கல்லானது நிலப்பரப்பிற்கு மேல் இரண்டரை அடி உயரமும், ஒரு அடி அகலமும், ஒரு அடி நீளமும் கொண்டது. வடக்கு நோக்கி இருக்கின்ற போர் வீரர் சிற்பம், வலது கையில் வானம் நோக்கிய வாள், இடது கையில் பூமி பார்த்த கேடயத்துடன், போருக்கு நடந்து செல்வது போல் காணப்படுகிறது. போர் வீரர் சிற்பத்தின் அடியில், ஒரு வீரன் தன் வலது கரத்தில் குதிரையை பிடித்துக் கொண்டு செல்வது போன்ற சிற்பமும், இந்த சிற்பத்திற்கு கீழாக தென்னாராமன் என்னும் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.
அதே நடு கல்லில் மேற்கு நோக்கிய சிற்பமானது போருக்கு செல்வதற்கு முன் இறைவனை வணங்குவதை போன்று வலது கால் தரையில் மடக்கி, இடது கால் தடம் பதித்து மடங்கி, வலது கையில் வானம் நோக்கிய வாள், இடது கையில் தெளிவாக வளைந்த கேடயம் காணப்படுகிறது. அந்தப் போர் வீரரின் சிற்பத்திற்கு கீழாக, இரண்டு அடியில், பெரிய நரசிங்க தேவர் என்னும் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. அதே நடு கல்லில் தெற்கு நோக்கிய சிற்பமானது, போருக்கு செல்வது போன்று காணப்படுகிறது. இந்த சிற்பத்தில் போர்வீரர் வலது கையில் வானம் நோக்கிய வாள், இடது கையில் பூமி பார்த்த கேடயம் பெற்றிருப்பதை காட்டுகிறது. இந்த சிற்பத்தில் காணப்படும் போர் வீரனின் முகம் சிதலமடைந்து காணப்படுகிறது. இந்த சிற்பத்திற்கு அடியில் இரண்டு அடிகளில் மூவரக்கராயர் என்னும் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த நடுகற்கள் ஒரு குடும்பத்தைச் சார்ந்த மூன்று போர் வீரர்களுக்கு வைக்கப்பட்ட நடுகற்களாக கருதலாம். நடுவில் வைக்கப்பட்டுள்ள நடுகல்லானது, நிலப்பரப்பிற்கு மேல் ஒன்றையடி உயரமும், ஒரு அடி அகலமும், ஒரு அடி நீளமும் கொண்டதாக உள்ளது. இந்த கல்லின் பின்புறம் முற்றிலுமாக சிதலம் அடைந்துள்ளது. இந்த கல்லில் காணப்படும் சிற்பமானது போருக்குச் செல்லும் முன் தயாராக இருப்பது போன்ற காட்சியை கொண்டுள்ளது. அந்தப் போர் வீரரின் சிற்பத்திற்கு கீழாக இரண்டு அடியில் மறவன் குதிரை தேவர் என்ற பெயர் கொண்ட தமிழ் கல்வெட்டு எழுத்துக்கள் பிழையுடன் காணப்படுகின்றன. அதற்குக் கீழ் ஓர் மனிதன் படுத்திருப்பது போன்ற சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. கடைசியாக, வட புறத்தில் இருக்கின்ற நடு கல்லில் காணப்படும் போர் வீரரின் சிற்பத்தின் முகம் சிதலமடைந்து காணப்படுகிறது. இந்த நடுகளானது, தரை பகுதிக்கு மேல் இரண்டடி உயரம், ஒரு அடி நீளம், ஒரு அடி அகலம் கொண்டது. இந்த சிற்பமும் மேல் நோக்கிய போர் வாளை வலது கையிலும் வளைந்த கேடயத்தை இடது கையிலும் பெற்றிருக்கின்றது.
இந்த சிற்பத்திற்கு கீழாக மூன்று வரிகளில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. சேந்தி சேம் மகன் வடுகம்பளம் என்ற வார்த்தைகளை இந்த கல்வெட்டில் காண முடிகிறது. முதல் வரியில் சில எழுத்துக்களும், இரண்டாம் வரியில் முதல் எழுத்தும் சிதலமடைந்துள்ளது. இந்த மூன்று நடுகற்களில் காணப்படுகின்ற ஐந்து சிற்பங்களின் தலைமுடி கொண்டை வலது புறத்தில் போடப்பட்டு உள்ளது. மேற்கு நோக்கிய அனைத்து சிற்பங்களும் வளைந்த கேடயத்தையும், வானம் பார்த்து இருக்கின்ற போர்வாளையும் பெற்றிருக்கின்றன. போருக்குச் செல்கின்ற வீரம் பொருந்திய போர் வீரர்களுக்காக செதுக்கப்பட்ட நடு கற்களாக இது அமைந்திருக்கின்றது என்றனர்.