பதிவு செய்த நாள்
09
டிச
2023
09:12
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள, திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவிலில் இன்று (9ம் தேதி) நடைபெற்ற தேரோட்டத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்று, வடம்பிடித்து இழுத்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் நாகநாதசாமி திருக்கோவில் உள்ளது. இங்கு ராகுபகவான் தனி சன்னதியில் நாககன்னி, நாகவள்ளி என இரு தேவியருடன் அருள்பாலித்து வருகிறார். நவகிரக கோவில்களில் பெரும் சிறப்பு பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் கடை ஞாயிறு விழா நடைபெறுவது சிறப்பாகும். அதன்படி இந்த ஆண்டிற்கான கார்த்திகை மாத கடை ஞாயிறு பெருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து, கார்த்திகை கடை ஞாயிறு விழாவை முன்னிட்டு தினசரி பகல் 12:00 மணியளவில் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு 7:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் மகா தீபாரதனையும் நடைபெற்றது. தொடர்ந்து, பல்வேறு வாகனங்களில் வீதியுலாவும், அதனைத்தொடர்ந்து நேற்று இரவு கிரிகுஜாம்பிகை சமேத நாகநாதர் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. விழாவின் ஒன்பதாம் நாளான இன்று (9ம் தேதி) பஞ்சமூர்த்திகள் தேரில் எழுந்தருள திருத்தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை (10ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், மதியம் 2:00 மணிக்கு சூரிய புஷ்கரணி திருக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.