பெரம்பலுார், சிறுவாச்சூர் பெரியசாமி கோவிலில் உள்ள பெரியசாமி சாமியின் மீசையின் ஒரு பகுதி நேற்று பெயர்ந்து விழுந்தது. பெரம்பலுார் மாவட்டம், சிறுவாச்சூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மதுர காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலின் துணைக்கோவிலான பெரியசாமி கோவில் சிறுவாச்சூர் அருகே பெரியசாமி மலையில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சுடுமண்ணால் ஆன சுவாமி பரிவார தெய்வங்கள் உள்ளிட்ட சிலைகள் கடந்த ஆண்டு மர்ம நபரால் உடைத்து சேதப்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, 20 அடி உயரமுள்ள பெரியசாமி சிலை செல்லியம்மன் சிலை, செங்கமலை சுவாமி சிலை, குர புள்ளையான் சிலை, வாகனங்கள் உள்ளிட்ட சுவாமி சிலைகள் சுடு மண்ணால் அமைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை பெரியசாமி கோவில் 20 அடி உயரமுள்ள பெரியசாமி சாமி சிலையின் மீசை பகுதி பெயர்ந்து விழுந்து கிடந்தது. இதையறிந்த, சிறுவாச்சூர் கோவில் அலுவலர்கள் அங்கு சென்று பார்வையிட்டனர். இது குறித்து இந்து சமய அறநிலைத்துறைக்கு தகவல் அனுப்பி உள்ளனர். தகவலறிந்த, பெரம்பலுார் போலீசார் இப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழையால் சாமியின் மீசை பகுதி பெயர்ந்து விழுந்ததா? அல்லது மர்ம நபர் யாரேனும் சேதப்படுத்தினார்களா என்பது குறித்து விசாரிக்கின்றனர்.