பதிவு செய்த நாள்
20
அக்
2012
11:10
அக்.21ல் அம்பிகையை இந்திராணியாக அலங்கரித்து வழிபடவேண்டும். இவளை வழிபட்டால் சுகபோக வாழ்வு உண்டாகும். நாளை மதுரை மீனாட்சியம்மன், சிவசக்தி அலங்காரத்தில் காட்சி தருகிறாள். ஆணும் பெண்ணும் சமம் என்பதை உணர்த்தும் கோலம் இது. கயிலையில் சிவனும், அம்பிகையும் இருந்த போது, பிருங்கி முனிவர், தீவிர சிவபக்தரான இவர், அம்பாளை வலம் வராமல் சிவனை மட்டும் வணங்கினார். அம்பிகையின் பெருமையை உணர்த்த விரும்பிய சிவன், தேவியை நெருங்கி அமர்ந்தார். ஆனால், முனிவர் வண்டாக உருவெடுத்து இருவருக்கும் நடுவில் புகுந்து, இறைவனை மட்டும் வலம் வந்தார். இதையடுத்து அம்பாள் சிவனின் உடலில் பாதி வேண்டி தவமிருந்தாள். இதன் பலனாக ஈசனின் இடப்பாகத்தைப் பெற்றாள். சிவசக்தியின் மகிமையை உணர்ந்த பிருங்கி அர்த்தநாரியை வலம் வந்து ஆசிபெற்றார். இக்கோலத்தைத் தரிசித்தால் கணவன், மனைவி ஒற்றுமை நிலைத்திருக்கும்.
நாளைய நைவேத்யம்: வெண்பொங்கல்
தூவ வேண்டிய மலர்: பிச்சி, செவ்வந்தி
பாட வேண்டிய பாடல் :
மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை
கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.