பதிவு செய்த நாள்
19
டிச
2023
08:12
பெ.நா.பாளையம்; அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, அட்சதைகள் அடங்கிய கும்பங்கள் பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன.
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு சார்பில், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி அட்சதைகள் அடங்கிய கும்பங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், சுவாமி திவ்ய ஆத்மானந்தாஜி பேசுகையில்," பக்தி நம் அனைவரையும் ஒருங்கிணைக்கிறது. பக்திக்கு சாதி வேறுபாடுகள் கிடையாது. நம் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களுக்கு தீர்வுகள் நமது இதிகாசங்களில் உள்ளன" என்றார். நிகழ்ச்சியில், கோவை வடக்கு பகுதியில்,17 மண்டலங்களை உள்ளடக்கிய பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், எஸ்.எஸ். குளம், அன்னூர், சூலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இந்து அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் அயோத்தி ராமர் கோவில் அட்சதைகள் அடங்கிய கும்பங்கள் வழங்கப்பட்டன. அவர்கள் அட்சதைகளை மஞ்சள், நெய் உள்ளிட்ட பொருள்களுடன் கலந்து, அட்சதைகளை, அந்தந்த பகுதியில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் வசிக்கும் பொது மக்களிடம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் உடன் வழங்க அறிவுரைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், வள்ளிக்காவு, மாதா அமிர்தானந்தமயி மடம், சுவாமி சர்வ அமிர்தா சைதன்யா, மேட்டுப்பாளையம் ஜில்லா ஆர்.எஸ்.எஸ். தலைவர் சம்பத் குமார், கோவை வடக்கு பா.ஜ., தலைவர் சங்கீதா, பொதுச்செயலாளர் சுபாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.