சீர்காழி தாடாளன் பெருமாள் கோவில் சொர்க்கவாசல் திறப்பு; பெருமாள் பாத தரிசனம் கண்டு பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23டிச 2023 06:12
மயிலாடுதுறை; சீர்காழி தாடாளன் கோவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் வலது பாத தரிசனம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் திரு விக்ரம நாராயண பெருமாள் எனப்படும் தாடாளன் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மூலவர் தனது இடது பாதத்தை ஆகாயத்தை நோக்கி தூக்கியவாரு உலகளந்த பெருமாளாக காட்சி தருகிறார் உற்சவர் நாடாளும் பெருமாள் லோகநாயகி தாயாருடன் அருள் பாலித்து வருகிறார். 108 திவ்ய தேசத்தில் 28வது திவ்ய தேசமாக இக்கோவிலில் மூலவர் திரு விக்ரம நாராயணப் பெருமாள் வலது பாதத்தை ஆண்டு தோறும் ஏகாதசி தினத்தில் மட்டுமே பக்தர்களுக்கு தரிசனம் செய்ய முடியும். பெருமாளின் வலது பாதத்தில் அருகே ஓர் அடி உயரத்தில் தவிட்டு தாடாளன் விக்ரகத்தையும் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும். மூலவர் வலது பாதம் மற்றும் தவிட்டு தாடாளன் பெருமாளை தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு பிறவிப் பிணி நீங்கும் என்பது ஐதீகம். பிரசித்தி பெற்ற இக்கோவிலில் ஏகாதசியை ஒட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீதேவி பூதேவி சமேத உற்சவர் தாடாளன் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்து வைக்கப்பட்டு சாத்துமுறை நடைபெற்றது. தொடர்ந்து ரத்தின அங்கி அலங்காரத்தில் பெருமாள் சொர்க்கவாசல் அருகே எழுந்தருள சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது சொர்க்கவாசல் வழியே பெருமாள் எழுந்தருள கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர். பெருமாள் கோவிலை வலம் வந்து வசந்த மண்டபம் எழுந்தருளினார். நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவர் உலகளந்த பெருமாளின் வலது பாத தரிசனம் கண்டு பிரார்த்தனை செய்தனர். பூஜைகளை பத்ரிநாத் பட்டாச்சாரியார் செய்து வைத்தார்.