இன்று திருவாதிரை விரதம், ஆருத்ரா தரிசனம்; நடராஜ பெருமானைப் போற்றுவோம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27டிச 2023 07:12
நட்சத்திரங்களில் ‘திரு என்ற அடைமொழியோடு வருவது ஆதிரை மற்றும் ஓணம் மட்டுமே. ஆடல்வல்லானின் ஆட்டத்தாலேயே அண்டசராசரங்களும் இயங்குகின்றன. முருகப்பெருமான் திருவாதிரை விரதம் இருந்து ஈசனின் அருள்பெற்றார். சுவாமிக்கு களி, தயிர்ச்சாதம், சுண்டல் நிவேதனம் செய்வது சிறப்பு.
மார்கழியில் வரும் திருவாதிரை நட்சத்திர நாள் ஒரு புண்ணிய தினம் அதை ஆருத்ரா என்பர். நடராஜப் பெருமானுக்கு இன்னாளில் நடைபெறும் அபிஷேக ஆராதனையைக் காண ஏராளமான பக்தர்கள் கூடுவர். கேரளத்திலும் மார்கழித் திருவாதரை நாள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால் அங்கு இது முழுமையாக ஒரு பெண்கள் பண்டிகையாகவே உள்ளது. தவக்கோலம் பூண்டு கன்னியாக இருந்த பார்வதி (மன்மதனை) எரித்த சிவபெருமானைத் தன் கணவராக வரிக்கிறாள். உமையின் அழகில் மயங்கிய பெருமான், தாம் எரித்த காமனை உயிர்பெற்று எழச் செய்வதாக அவளுக்கு வரமளிக்கிறார். இந்த வரம் அருளியதை எண்ணி, சிவபெருமான் தனது அழிக்கும் தன்மையை விலக்கி, சிருங்கார உருவம் எடுத்து, நாங்கள் வேண்டும் வரத்தையும் அருளவேண்டும் என்பதற்காகவே பெண்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்து வருகிறார்கள். பகவானை மகிழ்விக்கச் செய்து உவமையவளைப் போல் கன்னிகளும், சுமங்கலிகளும் அதிகாலையில் குளித்து தூய ஆடைகளை அணிந்து உண்ணா நோன்பிருந்து வழிபடுகிறார்கள். நிலைத்த மாங்கல்யத்துக்காகவும், ஐஸ்வர்யத்துக்காகவும் இந்த விரதத்தை மேற்கொள்கிறார்கள். இன்று நடராஜரை தரிசித்து ஆடல்வல்லானின் அருளை பெறுவோம்.