பதிவு செய்த நாள்
24
அக்
2012
10:10
செஞ்சி: மேல்மலையனூரில் பக்தர்களுக்கு இடையூறாக சாலை ஓரங்களை ஆக்கிரமித்து கடை நடந்தி வருபவர்களால் கடும் நெரிசல் ஏற்படுகிறது. இங்கு முறையான ஆக்கிரமிப்பு அகற்றம் செய்ய கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை போலவே, இங்கு ஆக்கிரமிப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விழா காலங்களில் பஸ் நிலையத்தில் இருந்தும், தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்தும் பக்தர்கள் கோவிலுக்கு செல்லும் பிரதான சாலைகள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி உள்ளன. பெரிய தெரு, ஒத்தவாடை தெருவில் ரோட்டை ஒட்டி கடை நடத்துகின்றனர். அக்னி குளத்திற்கு செல்லும் வழியில், அரசு புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து நூற்றுக்கணக்கில் கடை நடத்துகின்றனர். விழா காலங்களில் வெளியூரில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் போக்குவரத்து நெரிசல் குறித்தோ, பக்தர்களின் வசதி குறித்தோ எந்த கவலையும் இல்லாமல் கடைகளை ரோட்டை ஒட்டி அமைக்கின்றனர். கடைகளில் பொருட்களை வாங்கும் பொதுமக்கள் சாலைகளில் நின்று தடை ஏற்படுத்து கின்றனர். இதே போல் கோவிலுக்கு செல்லும் கொடுக்கன்குப்பம் சாலையிலும், ஏராளமானவர்கள் நிரந்தரமாக கடை நடத்துகின்றனர். மயான பகுதியில் இருந்து வெளியே வரும் இடத்திலும், கோவிலுக்கு செல்லும் வழியில் கட்டடங்களில் கடை நடத்துபவர்களும், ரோட்டை ஒட்டி கடைகளை நடத்து கின்றனர். இதனால் அமாவாசை இரவு ஊஞ்சல் உற்சவத்திற்கு வரும் பக்தர்கள் கடும் நெரிசலில் சிக்கி கொள்கின்றனர். அரை கிலோ மீட்டர் தூரத்தை கடக்க ஒரு மணி நேரம் வரை நெரிசலில் சிக்குகின்றனர். கோவில் பகுதியில் விபத்தில் சிக்குபவர்களையும், உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டவர்களையும் ஆம்புலன்ஸ் மூலமும் வெளியே கொண்டு செல்ல முடிவதில்லை. குறிப்பாக ஒத்தவாடை சாலை, பெரியதெரு ஆகிய இரண்டு சாலையும் கொடுக்கன்குப்பம் சாலையுடன் இணையும் பகுதியில் எப்போதும் நெரிசல் காணப் படுகிறது. நெரிசலில் சிக்கும் பெண்களிடம் தாலி செயின், நகைகளை திருடர்கள் கொள்ளையடித்து விடுகின்றனர். வெள்ளிக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்கள் அதிகம் வரும் போது இந்த வழியில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேல்மலையனூரில் பலமுறை ஆக்கிரமிப்புகள் அகற்றி உள்ளனர். இதில் ஒரு முறை கூட நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்களை அளந்து, குறியிட்டு முழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. அத்துடன் ஆக்கிரமிப்புகள் அகற் றப்பட்ட சில நாட்களிள் மீண்டும் ஏற்படும் ஆக்கிரமிப்புகளை தடுக்க எந்த ஏற்பாடும் இல்லை. முறையாக ஆக்கிரமிப்புகளை அகற்றினால் மேல்மலையனூரில் இப்போதுள்ளதை விட அகலமான சாலை வசதி கிடைக்கும். பக்தர்கள் நெரிசலில் சிக்கி அவதிப்படுவதை தடுக்க, இங்கு முறையான ஆக்கிரமிப்பு அகற்றம் செய்ய கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.