பதிவு செய்த நாள்
29
டிச
2023
05:12
நாமக்கல்; வரும், 2024, ஜன., 11ல், ஆஞ்சநேயர் ஜெயந்தி அன்று, கட்டளைதாரர் கிடைக்காததால், ஒரு லட்சத்து எட்டு வடமாலை சாத்துபடி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கோவில் நிர்வாகம் சார்பில், குறைந்த அளவு வடமாலை தயாரித்து சாத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் நகரின் மையத்தில், ஒரே கல்லினால் உருவான சாலகிராம மலையின் மேற்குப்பகுதியில், மலையைக் குடைந்து குடவறைக் கோவிலாக உருவாக்கப்பட்டுள்ள நாமகிரித்தாயார் உடனுறை நரசிம்மர் சுவாமியையும், சாலகிராம மலையையும் வணங்கி நின்ற நிலையில், 18 அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர் சுவாமி, சாந்த சொரூபியாக வணங்கி நின்ற நிலையில், பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆஞ்சநேயர் எடுத்து வந்த சாலகிராமம் மலையாக உருவாகி உள்ளதால், அந்த மலை வெட்டவெளியில் உள்ளது. அதுபோல், ஆஞ்சநேயர் கோவிலில் சுவாமிக்கு மேற்கூரை இல்லாமல் அமைந்துள்ளது சிறப்பு. தமிழகம் மட்டுமல்லாமல், பல்வேறு மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும், தினமும், ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து, சுவாமி தரிசனம் செய்கின்றனர். ஆண்டு தோறும், மார்கழி மாதம், மூல நட்சத்திரத்தில், ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படும். அதன்படி, வரும், 2024 ஜன., 11ல், ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது.
கடந்த, 2011 முதல் ஆண்டு தோறும், ஆஞ்சநேயர் ஜெயந்தி அன்று, சுவாமிக்கு, ஒரு லட்சத்து, எட்டு வடமாலை சாத்துபடி அலங்காரம் நடந்து வருகிறது. இந்நிலையில், வரும், ஜன. 11ல், ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவில், ஒரு லட்சத்து, எட்டு வடமாலை சாத்துபடி செய்ய கட்டளைதாரர் யாரும் முன்வரவில்லை என கோவில் நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.
இது குறித்து, பக்தர்கள் சிலர் கூறியதாவது: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், 14 ஆண்டுகளுக்கு பின், கடந்த, நவ., 1ல் குடமுழுக்கு பெருவிழா கோலாகலமாக நடந்தது. விழாவிற்காக, உபயதாரர்களிடம் அதிக அளவில் நன்கொடை வசூல் செய்யப்பட்டுள்ளது. தற்போது, ஒரு லட்சத்து, எட்டு வடமாலை சாத்துபடி செய்வதற்கு, 7.50 லட்சம் ரூபாய் செலவாகும். அதனால், இரண்டு மாதத்தில் அவ்வளவு தொகை நன்கொடையாக கொடுக்க உபயதாரர்கள் முன்வரவில்லை. அதனால், ஆஞ்சநேயர் ஜெயந்தி அன்று கோவில் நிர்வாகமே, குறைந்த எண்ணிக்கையில், வடமாலை சாத்துபடி செய்ய முடிவு செய்துள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். ஆனால், சுவாமிக்கு சாத்துபடி செய்யும் வடமாலை, மடப்பள்ளியில் தயார் செய்து மட்டுமே சாத்துபடி செய்ய வேண்டும். வெளியில் மண்டபத்தில் வைத்து தயார் செய்யக்கூடாது. அது, ஆகமவிதிப்படி தவறு என, கோவில் நிர்வாகம் தெரிவிக்கிறது.
இது குறித்து, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இளையராஜா கூறியதாவது: ஆஞ்நேயர் ஜெயந்தியை முன்னிட்டு, ஒரு லட்சத்து, எட்டு வடமாலை சாத்துபடி செய்வதற்கு, கட்டளைதாரர்கள் கிடைக்கவில்லை. ஆனால், ஆகமவிதிப்படி, அவ்வாறு செய்யக்கூடாது என, கோவில் அர்ச்சகர்கள் தெரிவிக்கின்றனர். அவ்வாறு சாத்துவடி சுவாமிக்கு உகந்தது அல்ல. முன்பு வற்புறுத்தி பண்ணச்சொன்னதால் செய்துவிட்டோம். மேலும் வெளியில் தயாரிப்பது சுகாதாரமாக இல்லை. சுவாமிக்கு படைப்பதற்கு மடப்பள்ளியில்தான் தயாரிக்க வேண்டும். வெளியில் மண்டபத்தில் வைத்து தயார் செய்வது சரியல்ல. இதை ஆரம்பத்தில் இருந்து சொல்லி வருகிறோம். ஆனால், யாரும் கேட்ப்தில்லை என அர்ச்சகர்கள் தெரிவிக்கின்றனர். அதற்கு குறைவாக, மடப்பள்ளியில் வைத்து எவ்வளவு செய்யமுடியும் என யோசித்துக் கொண்டிருக்கிறோம். அது, 10 ஆயிரமா, 20 ஆயிரமா, 30 ஆயிரமா என்பதை, கடைசி நேரத்தில்தான் முடிவு செய்வர். ஒரு லட்சத்து எட்டு என்பது இந்த ஆண்டு கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.