பதிவு செய்த நாள்
29
டிச
2023
06:12
ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்ளும் விவகாரத்தில், இண்டியா கூட்டணி கட்சிகளுக்குள் பெரும் குழப்பமும், மாறுபட்ட கருத்துகளும் நிலவுகின்றன. இதனால், தேசிய அரசியலில் புதிய பரபரப்பு நிலவுகிறது.
உ.பி., மாநிலம் அயோத்தியில், அடுத்த மாதம் 22ம் தேதி, ராமர் கோவில் திறப்பு விழா மற்றும் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். தவிர, மிக மிக முக்கிய பிரபலங்களுக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டு உள்ளன.
இந்நிலையில், ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க போவதில்லை என, கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளன.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் கட்சியும், தங்கள் கட்சி சார்பில் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என, தெரிவித்துள்ளது.
ஆனால், உ.பி.,யின் மிக முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாதியோ, மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இக்கட்சியின் தலைவர் அகிலேஷ்.
அவரின் மனைவியும், எம்.பி.,யுமான டிம்பிள் யாதவ், அழைப்பு வந்தால் நிச்சயம் கலந்து கொள்வேன் என்று கூறிவிட்டார்.
மழுப்பலான பதில்
மஹாராஷ்டிராவை சேர்ந்த உத்தவ் தாக்கரேயின், உத்தவ் பாலசாகேப் தாக்கரே சிவசேனா கட்சியோ, ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள மாட்டோம் என்று தெரிவித்துள்ளது.
தேசியவாத காங்., தலைவர் சரத்பவார், இந்த விவகாரத்தில் உறுதியான நிலைப்பாட்டை இன்னும் எடுக்கவில்லை.
அதேநேரத்தில், எதிர்க்கட்சிகளின், இண்டியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள பெரிய கட்சியான காங்கிரஸ், இதுவரை வாய் திறக்காமல் மவுனம் காப்பது, கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்திஉள்ளது.
காங்கிரசை பொருத்தவரையில், தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் முன்னாள் தலைவர் சோனியா, லோக்சபா காங்., தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகிய மூன்று பேர் அழைப்பிதழை பெற்றுள்ளனர்.
ஆனாலும், மூவரும் பங்கேற்பது குறித்து தற்போது வரை முடிவாகவில்லை. இதுபற்றி பலமுறை கேட்டுப்பார்த்தும், காங்., முக்கிய தலைவர்கள் பலரும், இன்னும் பல நாட்கள் உள்ளன; அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்ற, மழுப்பலான பதில்களையே தருகின்றனர்.
ராமர் கோவில் திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்றாலும் சிக்கல்; பங்கேற்கவில்லை என்றாலும் சிக்கல் என்பது தான், இதற்கு காரணம்.
வட மாநிலங்களில், மிதவாத ஹிந்துத்துவா பாணியை, காங்., கடைப்பிடிக்க துவங்கியிருந்தாலும், ராமர் கோவில் என்பது, அரசியல் ரீதியாக உணர்வுப்பூர்வமான விவகாரம் என்பதால், கட்சியின் மூத்த தலைவர்கள் மத்தியில் பெரும் தர்மசங்கடம் நிலவுகிறது.
இந்நிகழ்ச்சியை, பா.ஜ., அரசியல் ரீதியாக பயன்படுத்த முற்படுவதாக விமர்சனங்கள் கிளம்பியுள்ள நிலையில், இதை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தும், காங்., தலைவர்களிடம் தெளிவான திட்டமிடல் இல்லை.
ஆதரவு
சமீபத்தில், டில்லியில் நடந்த இண்டியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் கூட, ராமர் கோவில் திறப்பு விழா குறித்த பேச்சு எழுந்தது.
அப்போது, தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட சிலர், நிச்சயமாக இந்த விவகாரம், இண்டியா கூட்டணி முன் வைக்கப்படும் சவால் தான். அதை கவனமாக கையாள்வது அவசியம் என்று எச்சரித்து பேசினர்.
அயோத்தி தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் அளித்த போது, அதை மதிப்பதாக கூறி, காங்., ஏற்றது. ராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவும் தெரிவித்தது.
இந்நிலையில், கோவில் திறப்பு விழாவை புறக்கணித்தால், அதன் முந்தைய நிலைப்பாட்டிற்கு முரணாக அமைந்து விடும் என்றும், அக்கட்சி மேலிடம் அஞ்சுகிறது.
அதேசமயம், லோக்சபா தேர்தலுக்காக, மதசார்பின்மை பேசும் பல கட்சிகளோடு கரம் கோர்த்துள்ள நிலையில், ராமர் கோவில் நிகழ்ச்சியில் பங்கேற்றால், பா.ஜ.,வுக்கு பலம் சேர்ப்பதற்கு, நீங்களே துணை போகலாமா என்ற கேள்வி எழும்; கூட்டணி சிதிலமடைய நாமே காரணமாகி விடுவோமோ என்றும் காங்., அஞ்சுகிறது.
இதற்கு முன்னோட்டமாக, கேரளாவில் காங்கிரசின் மிக முக்கிய கூட்டாளியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக், வெளிப்படையாகவே காங்கிரசை விமர்சித்து விட்டது.
எதிரணியில் இருந்த போதிலும், உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளதற்காக, கம்யூனிஸ்ட் கட்சிகளை ஆதரித்தும், வரவேற்றும் பேசியுள்ளது.
அடுத்த மாதம்
மேலும், காங்., - எம்.பி., ராகுல் அடுத்த மாதம் மேற்கொள்ளவுள்ள, பாரத் ஜோடா 2.0 யாத்திரையானது, உ.பி., பீஹார், மஹாராஷ்டிரா, குஜராத் என, தீவிர ஹிந்துத்துவா மற்றும் ஹிந்தி பேசும் மாநிலங்களில் தான் நடைபெற உள்ளது.
ராமர் கோவில் நிகழ்ச்சியை புறக்கணித்தாலோ அல்லது இரண்டாம் கட்ட தலைவர்களை அனுப்பி அலட்சியப்படுத்தினாலோ, இம்மாநிலங்களில் தங்களது ஓட்டு வங்கி கடுமையாக அடிவாங்கும் என்பதாலும், காங்., இருதலை கொள்ளியாக அவதிப்படும் சூழ்நிலை எழுந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தங்களுக்கு எதுவெல்லாம் வசதியோ, அவற்றின்படியே பா.ஜ., நடக்கிறது. விளம்பரத்திற்காக, எதையும் செய்வதில் கில்லாடிகள் அந்தக் கட்சியினர். வேலையின்மை, பணவீக்கம், காஷ்மீர், மணிப்பூர் என உண்மையான பிரச்னைகளை திசை திருப்ப, ராமர் கோவில் திறப்பு விழாவை பா.ஜ., பயன்படுத்துகிறது. இந்த திறப்பு விழா ஒன்றும், தேசிய நிகழ்ச்சி அல்ல; பா.ஜ.,வின் நிகழ்ச்சி. பா.ஜ., நடத்தப்போகும் பொதுக்கூட்டம். அப்படியிருக்க, அக்கட்சி நடத்தும் நிகழ்ச்சியில், கலந்து கொள்ள யார் விரும்புவர்?
சஞ்சய் ராவத், ராஜ்யசபா எம்.பி., சிவசேனா (உத்தவ்) கட்சி.
- நமது டில்லி நிருபர் -