பதிவு செய்த நாள்
30
டிச
2023
10:12
மயிலாடுதுறை; ஞானபுரீ சங்கடஹர மங்கல மாருதி ஆஞ்சநேயர் கோவில் ஜனவரி 2 மற்றும் 11ம் தேதிகளில் இருபெரும் ஜெயந்தி விழா நடைபெறுகிறது.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள திருவோணமங்கலம் ஞானபுரீ சித்திரக்கூட சேத்திரத்தில் ஸ்ரீ சங்கடஹர மங்கள மாருதி ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் லட்சுமி நரசிம்மர், கோதண்டராமர் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளியுள்ளனர். இங்கு எழுந்தருளியுள்ள 33 அடி உயரம் கொண்ட விஸ்வரூப ஸ்ரீ சங்கடஹர மங்கள மாருதி ஆஞ்சநேய சுவாமி இடுப்பில் சஞ்சீவி மூலிகைகளுடன் பக்தர்களுக்கு அருள் பாலிப்பது உலகில் வேறு எங்கும் இல்லாத சிறப்பு. இங்கு ஆஞ்சநேய சுவாமியை வழிபட்டால் சங்கடங்கள் நீங்கி மங்களம் உண்டாகும் என்பது ஐதீகம். கோவிலில் ஜனவரி 2ஆம் தேதி ஜெகத்குரு சங்கராச்சாரியார் சமஸ்தானம் சகடபுரம் ஸ்ரீ வித்யா பீடம் ஸ்ரீ வித்யா அபிநவ ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணா நந்த தீர்த்த மகா சுவாமிகள் ஜெயந்தி விழா நடைபெறுகிறது. அன்று காலை நவகிரக, மிருத்தியுஞ்சய ஹோமம், மாலை ஆவஹந்தி ஹோமம் நடத்தப்பட்டு மூத்த பாகவதர்களை கௌரவித்தல், உதவிகள் வழங்குதல் மற்றும் கோவிந்தபுரம் நாம சங்கீர்த்தனம் விட்டல் தாஸ் மகராஜ் ஜெயகிருஷ்ண தீட்சதர் பஜனை, அன்னதான பிரசாதங்கள் வழங்கும் நிகழ்வும் நடைபெற உள்ளது.
ஜனவரி 11ஆம் தேதி வியாழக்கிழமை கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற உள்ளது. அனுமன் ஜெயந்தியன்று விஸ்வரூப ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை, இயல், இசை, நாட்டிய நிகழ்ச்சிகள், அன்னதானம் நடைபெறும். மகா ஸ்வாமிகள் ஜெயந்தி மற்றும் அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஜனவரி 3ஆம் தேதி லட்சுமி நரசிம்மர் ஹோமம், ஜெபம், 4ம் தேதி தன்வந்திரி ஹோமம், மாலை ஆவஹந்தி ஹோமம், 5ம் தேதி நவசண்டி மகாயாகம், ஜெபம், 6ம் தேதி ராம மந்திர ஹோமம், லட்சுமி நாராயண கிருதய ஹோமம், 7ம் தேதி ஆஞ்சநேயர் ஹோமம் நடைபெறும். கோவில் நிர்வாகம் சார்பில் மகா ஸ்வாமிகளின் ஜென்ம ஜெயந்தி விழா, அனுமன் ஜெயந்தி விழா மற்றும் சிறப்பு ஹோமங்களில் பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு திருவருளையும், குருவருளையும் பெற வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை தர்மாதிகாரி ரமணி அண்ணா, சமஸ்தான நிர்வாகி ஸ்ரீகாரியம் சந்திரமௌலி ஆகியோர் செய்துள்ளனர்.