பதிவு செய்த நாள்
24
அக்
2012
10:10
திருவாரூர்: திருவாரூர் தியாகராஜர் கோவிலில் 2013 ஏப்ரல் மாதம் நடக்கவுள்ள கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ரூ.10 கோடி மதிப்பில் புதுப்பிக்க துவங்கிய முதற்கட்ட பணிகள் வடகிழக்குப் பருவமழையால் தொய்வடைந்துள்ளது.தமிழக சைவ தலங்களில் பழமையும், பெருமையும் வாய்ந்துடன், தலைமை பீட மாகவும், பிறப்பின் முக்தி தலமாகவும் திருவாரூர் தியாகராஜர் கோவில் உள்ளது. இங்கு மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும், அப்பர், சுந்தரர், சம்மந்தர், மாணிக்கவாசகர் ஆகியோரால் பாடல் பெற்ற பெருமைக்குரியது. சைவ சயமத்தின் தலைமையான இக்கோவிலில் மூன்று நந்தவனங்கள், மூன்று பெரியபிரகாரங்கள், ஒன்பது ராஜகோபுரங்கள், 12 பெரிய மதில்கள், 13 மண்டபங்கள், 15 தீர்த்தக்கிணறுகள், 80 விமானங்கள், 100 க்கும் மேற்பட்ட சன்னதிகள் உள்ளது. இக்கோவில் தேர், ஆசியாக்கண்டத்திலேயே பெருமைக்குரியது. இங்கு ஆண்டு தோறும் பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் ஆழித்தேரோட்டம் நடக்கும் போது ஆயிரக்கணக்கானோர் கூடி ஆரூரா, தியாகேசா...., என்று பக்தி முழக்கமிடுவர். வரலாற்றுச் சிறப்பு மிக்க இக்கோவில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடப்பது வழக்கம். கடந்த 2001 ஏப்ரல் 9ம் நாள் கும்பாபிஷேகம் மிக விமர்சியாக நடந்தது. அதன்படி வரும் 2013 ஏப்ரல் மாதம் கும்பாபிஷேகம் நடத்திட பல்வேறு வகையில் 10 கோடிரூபாய் செலவில் முதற்கட்ட பணிகள் துவங்கி நடந்து வந்தது. தற்போது துவங்கியுள்ள வடகிழக்குப்பருவமழையால் புதுப்பிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்னும் இரு மாதங்களுக்கு மழை நீடித்தால் குறிப்பிட்டவாறு பணிகளை தரமாக முடித்து 2013 ஏப்ரல் மாதம் கும்பாபிஷேகம் நடத்த முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.