ஞானபுரீ விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயிலில் புத்தாண்டு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜன 2024 02:01
மயிலாடுதுறை; திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகேயுள்ள திருவோணமங்கலம் ஞானபுரீ சித்ரகூட சேத்ரம் ஸ்ரீசங்கடஹர மங்கல மாருதி ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் லட்சுமி நரசிம்மர், கோதண்டராமர் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளியுள்ளனர். 33 அடி உயரம் கொண்ட விஸ்வரூப ஸ்ரீ சங்கடஹர மங்கல மாருதி ஆஞ்சநேயர் சுவாமி இடுப்பில் சஞ்சீவி மூலிகைகளுடன் பக்தர்களுக்கு அருள் பாலிப்பது உலகில் வேறு எங்கும் இல்லாத சிறப்பு. ஆஞ்சநேய சுவாமியை வழிபட்டால் சங்கடங்கள் நீங்கி, மங்களம் உண்டாகும்.
இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் ஆங்கில வருட பிறப்பை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு விஸ்வரூப ஆஞ்சநேய சுவாமிக்கு ஜகத்குரு சங்கராச்சாரியார் சமஸ்தானம் சகடபுரம் ஸ்ரீ வித்யா பீடம் ஸ்ரீ வித்யா அபிநவ ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணா நந்த தீர்த்த மகா சுவாமிகள் முன்னிலையில் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு வாழைப்பழங்கள் மற்றும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேய சுவாமிக்கு அர்ச்சனைகள் செய்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து மகா சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசியும், 1 ரூபாய் நாணயம் மற்றும் பிரசாதங்களை வழங்கினார். தொடர்ந்து மாலை வெள்ளி ரதத்தில் ஆஞ்சநேய சுவாமி எழுந்தருள மங்கள வாத்தியங்கள் இசைக்க வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. நாளை 2 ம் தேதி ஜகத்குரு சங்கராச்சாரியார் சமஸ்தானம் சகடபுரம் ஸ்ரீ வித்யா பீடம் ஸ்ரீ வித்யா அபிநவ ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணா நந்த தீர்த்த மகா சுவாமிகள் ஜெயந்தி விழாவும், ஜனவரி 11 ம் தேதி வியாழக்கிழமை கோவிலில் அனுமன் ஜெயந்தி நடைபெறவுள்ளது. இரு பெரும் ஜெயந்தி விழாக்களை முன்னிட்டு ஜனவரி 3 ம் தேதி 7 ம் தேதி சிறப்பு ஹோமம் மற்றும் ஜெபங்கள் நடைபெறுகின்றன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருவருளையும், குருவருளையும் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தர்மாதிகாரி ரமணி அண்ணா, ஸ்ரீ காரியம் சந்திரமெளவி ஆகியோர் செய்துள்ளனர்.