பதிவு செய்த நாள்
08
ஜன
2024
08:01
அயோத்தி: உ.பி., மாநிலம் அயோத்தி ராமர் கோவிலில் வரும் 22ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கென நாடு முழுவதும் முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
ராமர் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழ் தினமலர் வெளியீட்டாளர் எல். ஆதிமூலத்திற்கு சென்னையில் உள்ள அவரது வீட்டில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பாளர்களால் வழங்கப்பட்டது. நகர ஆர்.எஸ்.எஸ்., செயலாளர் ராம்குமார், மாநில ஊடகதுறை பொறுப்பாளர் நரசிம்மன், மாநகர மக்கள் தொடர்பாளர் சுதர்சன், மற்றும் சென்னை மாநகர் உதவி மக்கள் தொடர்பாளர் ராம்குமார் ஆகியோர் அழைப்பிதழை வழங்கினர்.
முக்கியஸ்தர்கள் 7,500 பேருக்கு மட்டுமே நேரடி அழைப்பு !
கும்பாபிஷேகத்திற்கு நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர். இருப்பினும் முக்கியஸ்தர்கள் மொத்தம் 7,500 பேருக்கு மட்டுமே முறையான அழைப்பிதழ் வழங்கப்பட்டு இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
துறவிகள், சாதுக்கள்; இதில் துறவிகள், சாதுக்கள், மடாதிபதிகள், ஆதீனங்கள் மற்றும் ஹிந்து சமய பெரியவர்கள் என்ற வகையில் 5,600 பேருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. மீதி 1,900 பேர் முக்கியஸ்தர்கள், ஆட்சியாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள், பத்திரிகையாளர்கள். இதில் தமிழகத்தில் மட்டும் 120 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.