சூலூர்: சூலூர் திருவேங்கடநாத பெருமாள் கோவிலில், கல்யாண உற்சவம் மற்றும் தேர் திருவிழா நேற்று நடந்தது.சூலூர் ரயில்வே பீடர் சாலையில் உள்ள, பிரசித்தி பெற்ற ஸ்ரீ தேவி பூதேவி சமேத திருவேங்கடநாத பெருமாள் கோவிலில், 20ம் தேதி கொடியேற்றத்துடன் தேர்த் திருவிழா பூஜைகள் துவங்கின. யாகசாலை பூஜை, சுவாமி புறப்பாடும் நடத்தப்பட்டது. நேற்று காலை 9.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை, ஸ்ரீ தேவி பூதேவி சமேத வேங்கடநாத பெருமாளுக்கு திருக் கல்யாண உற்சவம் நடத்தப்பட்டது. பிற்பகல் 3.00 மணிக்கு, திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக தேர் ஊர்வலம் சென்றது. இன்று மாலை 5.00 மணிக்கு பரி வேட்டை, தெப்போற்சவம், நாளை வசந்த உற்சவம் நடத்தப்படுகிறது. விழா ஏற்பாடுகளை, புதூரார் மருதாசலத்தேவர் திருத்தேர் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.