பதிவு செய்த நாள்
10
ஜன
2024
05:01
சென்னை: ‛‛முருகனின் அறுபடை வீடுகளுக்கு ஆண்டுக்கு ஆயிரம் பேரை கட்டணமில்லாமல் ஆன்மிக சுற்றுலா அழைத்து செல்ல உள்ளோம். முதற்கட்ட பயணம் வரும் ஜன.,28ம் தேதி துவங்குகிறது என அமைச்சர் சேகர்பாபு நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் திருக்கோயில் அர்ச்சகர்கள் உள்ளிட்ட துறை நிலை ஓய்வூதிய பணியாளர்களுக்கு பொங்கல் கொடை வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேகர் பாபு துவக்கி வைத்தார். இப்புதிய திட்டத்தின் மூலம் 2,646 துறை நிலையிலான ஓய்வூதியதாரர்கள் பயன்பெற உள்ளனர். இதையடுத்து அமைச்சர் சேகர்பாபு தலைமையில், அறுபடை திருத்தலங்களுக்கு பக்தர்களை கட்டணமில்லாமல் ஆன்மிக சுற்றுலா அழைத்து செல்வது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இலவச சுற்றுலா: பின்னர் நிருபர்கள் சந்திப்பில், அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: ஆட்சி அமைந்து இதுவரை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 304 நிகழ்ச்சி நடந்து உள்ளது. முதல்வர் வழிகாட்டுதலின்படி அறுபடை வீடுகளாக உள்ள திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய திருத்தலங்களுக்கு 200 பக்தர்களை ஆண்டிற்கு 5 முறை அதாவது 1,000 பக்தர்களை கட்டணமில்லாமல் ஆன்மிக சுற்றுலா அழைத்து செல்ல உள்ளோம். முதற்கட்ட பயணம் வரும் ஜன.,28ம் தேதி துவங்குகிறது. இதற்கான விண்ணப்பங்களை நாளை முதல் துறையின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். தகுதியுடைய 200 விண்ணப்பதாரர்கள் முதற்கட்ட பயணத்தில் அழைத்துச் செல்லப்படுவர்கள். ஏனைய தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அடுத்தடுத்த ஆன்மிக பயணங்களில் அழைத்து செல்ல முன்னுரிமை வழங்கப்படும்.
60 வயதுக்கு மேல் 70 வயதுக்குள்; 60 வயதுக்கு மேல் 70 வயதுக்குள் இருப்பவர்கள் இந்த ஆன்மிக பயணத்திற்கு விண்ணப்பிக்கலாம். ராமேஸ்வரத்திலிருந்து காசிக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக 200 பேர் கட்டணம் இல்லாமல் முழுமையாக 50 லட்சம் ரூபாய் செலவில் அவர்களுக்கு சிறப்பு தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.