பதிவு செய்த நாள்
10
ஜன
2024
05:01
வடவள்ளி; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூசத்தை முன்னிட்டு, வரும், ஜன., 25, 26ம் தேதிகளில், மலைமேல் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலுக்கு, பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் மேற்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவிலில், ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்தாண்டு, தைப்பூச தேர்த்திருவிழாவிற்கு, லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, வரும், 25 மற்றும் 26ம் தேதிகளில், மலைப்பாதையில், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் துணை கமிஷனர் ஹர்சினி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், வரும், ஜன., 19ம் தேதி கொடியேற்றத்துடன் தைப்பூச தேர்த்திருவிழா துவங்க உள்ளது. 24ம் தேதி, திருக்கல்யாண உற்சவமும், 25ம் தேதி, தைப்பூச தேர் வடம் பிடித்தலும், 26ம் தேதி, தெப்பத்திருவிழாவும் நடக்க உள்ளது. திருவிழாவின் முக்கிய நாட்களான வரும், 25 மற்றும் 26ம் தேதி ஆகிய இரண்டு நாட்களும், அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. பக்தர்கள், படிக்கட்டு பாதை மற்றும் திருக்கோவில் மூலம் இயக்கப்படும் பஸ்கள் மூலம் மலைமேல் உள்ள கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்யலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.