பதிவு செய்த நாள்
14
ஜன
2024
06:01
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22 அன்று நடக்கவுள்ளது. இதை முன்னிட்டு ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை, ராமர் கோவிலின் இரவு நேர புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
கோவில் வாசலில் கருடன், அனுமன், யானை, ஜடாயு சிலைகள் மற்றும் ராமர் கோவிலின் உட்புறம், வெளிப்புறம், தரைதளம் என எல்லாமே மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இதனால் இரவு நேரத்தில் கோவில் ஜொலிக்கிறது. ராமர் கோவிலின் அழகிய வேலைப்பாடுகள், அதன் நேர்த்தி அழகை எல்லாம் இந்த மின்விளக்கின் ஒளி மேலும் அதிகரித்துக் காட்டுகிறது. ராம் லல்லா பிராணபிரதிஷ்டை ஜனவரி 22ம் தேதி ராமர் கோவிலில் நடைபெறும். ஆனால், கும்பாபிஷேக சடங்குகள் ஜனவரி 16ம் தேதியே துவங்கி விடும். ஸ்ரீ ராமர் சிலையின் நீளம் மற்றும் நிறுவப்பட்ட உயரம், இந்தியாவின் பிரபல விண்வெளி விஞ்ஞானிகளின் ஆலோசனையின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம், ஒவ்வொரு ஆண்டும் ராம நவமி, சைத்ரா மாதத்தின் சுக்ல பக்ஷத்தின் 9ம் தேதி, சூரிய பகவான் மதியம் 12:00 மணிக்கு ராமரின் நெற்றியை தன் கதிர்களால் தொடுவார் என்று ராமர் கோவில் அறக்கட்டளை பொதுச்செயலர் சம்பத் ராய் கூறியுள்ளார்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, அயோத்தியில் உள்ள 42 பூங்காக்களும் வரும் நாட்களில் சூரிய சக்தி மூலம் ஒளிரும். பிரமாண்டமான ராமர் கோவில் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட நிகழ்வு, மக்கள் மகிழ்ச்சியை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. இப்போதே தீபாவளி போல அயோத்தி ஜொலிப்பதை பார்த்து அனைவரும் வியக்கின்றனர்.