பதிவு செய்த நாள்
15
ஜன
2024
12:01
தை பிறந்தால் வழி பிறக்கும். தை மாதத்தின் முதல் நாளே தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையாகும். இந்நாளில் சூரியன் தன் வடதிசை பயணத்தைத் தொடங்குகிறார். இன்று சூரிய பகவானை வழிபடுபவர்கள் ஆரோக்கியம், செல்வம் குறைவின்றி பெறுவர். தை பிறந்தால் வழி பிறக்கும் என்னும் பழமொழியே இம்மாதத்தின் சிறப்பை உணர்த்தும். தை மாதத்தின் முதல் நாள் தமிழர் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.
இந்நாளே பொங்கல் பண்டிகையாகும். கேரளாவிலும், வட மாநிலங்களிலும் இந்நாளை "மகர சங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். "சங்கரமணம் என்றால்" நகரத் தொடங்குதல் என்பது பொருள். இந்நாளில் சூரியன் மகர ராசியில் பிரவேசித்து, தன் வடதிசை பயணத்தைத் தொடங்குகிறார். இது, உத்ராயண புண்ணிய காலத்தின் துவக்கமாகும். விவசாயிகள் முதன்முதலில் அறுவடை செய்த பயனுக்காக, இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் கொண்டாடுவதே இவ்விழாவின் அடிப்படையாகும். அன்று, வயலில் விளைந்த புதிய நெல்லை குத்தி அரிசியாக்கி, அதில் பொங்கலிட்டு கண்ணிற்கு தெரியும் கடவுளான சூரியனுக்கு படைப்பர். செய்ந்நன்றி மறக்கக்கூடாது என்ற அரிய தத்துவத்தை உணர்த்தும் நாள் இது. தைப்பொங்கலன்று வாசலில் அடுப்பு வைத்து பொங்கலிடுவர். பொங்கல் பானையில் பால் கொதித்துவரும்போது, ""பொங்கலோ பொங்கல் என்று குரல் எழுப்புவதும், வயதான பெண்கள் குரவையிடுவதும் (குலவை) இப்பண்டிகைக்குரிய சிறப்பாகும். இறைவனுக்கு நன்றி தெரிவிப்போம்.. இன்பம் பொங்க வாழ்வோம்!