அயோத்தி :ராமர் கோயில் திறக்கப்படுவதை அடுத்து மிகப்பெரிய ஆன்மிக சுற்றுலா தலமாக உருவெடுக்கும் அயோத்தியில் ஓட்டல் துறையில் பெரும் முதலீடுகளுக்கான பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
உத்தர பிரேதசத்தின் அயோத்தியில் ஜன.22ல் ராமர் கோவில் கும்பாபிஷேகம் முடிந்த பின் நாடு முழுதும் இருந்து பக்தர்கள் வருகை துவங்க உள்ளது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அயோத்தி நகருக்கு வருகை தர உள்ளனர்.இதனால் மிகப் பெரிய ஆன்மிக சுற்றுலா தலமாக அயோத்தி உருவெடுத்து வருகிறது. பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் மாநில அரசும் மாவட்ட நிர்வாகமும் முழு வீச்சில் செய்து வருகின்றன.
சிறிய நகரமான அயோத்தியில் பக்தர்கள் தங்கும் விடுதிகள் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளன. ராமர் கோயில் கட்டுமானம் துவங்கிய உடனேயே 50க்கும் மேற்பட்ட பிரபல ஹோட்டல் நிர்வாகங்கள் அயோத்தியில் தங்கும் விடுதிக்கான கட்டுமான பணியினை துவங்கின.சிறிய ஹோட்டல் விடுதிகளில் துவங்கி சொகுசு விடுதிகள் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள்வரை அயோத்தியில் உருவாகி வருகின்றன.இது குறித்து அயோத்தியின் மண்டல கமிஷனர் கவுரவ் தயாள் கூறியதாவது:சமீபத்தில் நடந்து முடிந்த சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் அயோத்தியின் சுற்றுலா தொடர்பாக 18000 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.மாநாடு முடிந்த பிறகும்பல்வேறு தரப்பினரும் அயோத்தி சுற்றுலா துறையில் முதலீடு செய்ய விண்ணப்பித்து வருகின்றனர். அயோத்தியில் சுற்றுலா தொடர்பாக 126 திட்டங்கள் நடை முறைப்படுத்த தயார் நிலையில் உள்ளன.
இந்த திட்டங்கள் 4000 கோடி ரூபாய் மதிப்புடையவை.தாஜ் மாரியட் ஜிஞ்ஜர் ஓபராய் டிரைடண்ட் ராடிசன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நட்சத்திர விடுதிகள் தங்கள் கட்டுமான பணிகளை அயோத்தியில் செய்து வருகின்றன. இந்த ஹோட்டல்கள் விரைவில் திறக்கப்பட உள்ளன.இவை தவிர சாதாரண மக்கள் தங்குவதற்கான சிறிய அளவிலான தங்கும் விடுதிகளும் திறக்கப்பட உள்ளன.
மிகப் பெரிய நான்கு ஹோட்டல் நிறுவனங்கள் மட்டும் அயோத்தியில் 420 கோடி ரூபாய் மதிப்பிலான நட்சத்திர விடுதிகளை கட்டி வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.
அயோத்தியில் நிலம் வாங்கிய அமிதாப்
மஹாராஷ்டிராவின் மும்பையை சேர்ந்த ஹவுஸ் ஆப் அபிநந்தன் லோதா என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் அயோத்தி ராமர் கோவில் அருகே 51 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட ஏழு நட்சத்திர நகரை உருவாக்கி வருகிறது.இந்த இடம் அயோத்தி ராமர் கோவிலில் இருந்து 15 நிமிடமும் விமான நிலையத்தில் இருந்து 30 நிமிட பயணத்தில் அமைந்துள்ளது.இந்த நகருக்குள் பிரமாண்ட ஏழு நட்சத்திர ஹோட்டல் வரவுள்ளது. இங்கு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் 10,000 சதுர அடி நிலத்தை 14.50 கோடி ரூபாய்க்கு வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்த நகரத்தில் கட்டுமானப் பணி 2028ல் முடிவடைய உள்ளது. ராமர் கோயில் கும்பாபிஷேக தினத்தன்று இந்த பிரமாண்ட நகரத்தின் மனை விற்பனை அதிகாரப்பூர்வமாக துவங்க உள்ளது.
கோயிலை கொண்டாடும் கின்னார்
உத்தர பிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில் வாழும் மூன்றாம் பாலினத்தனவர்கள் கின்னார்என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் குழந்தை பிறந்த வீடுகளுக்கு சென்று புதிதாக பிறந்த பச்சிளங்குழந்தையை வாழ்த்தி பணம் மற்றும் பரிசுப் பொருட்களை பெற்று வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். ராமர் கோவில் கும்பாபிஷேக தினத்தன்று பிறக்கும் குழந்தைகளை வாழ்த்த பணம் பெறப்போவதில்லை என இந்த சமூகத்தினர் அறிவித்துள்ளனர்.