பதிவு செய்த நாள்
19
ஜன
2024
10:01
அயோத்தி; அயோத்தியில் ராமர் கோவில் பிரமாண்டமாக அமைவதற்கு பெரு முயற்சி எடுத்தவர் பிரதமர் மோடி. தற்போது கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இதையொட்டி அவர் 11 நாள் அனுஷ்தனா என்னும் கடுமையான விரதம் அனுசரித்து வருகிறார். தரையில் படுத்து உறங்கும் அவர், வேறு உணவு எதுவும் இன்றி தேங்காய் தண்ணீர் மட்டுமே அருந்தி வருகிறார். அவரது இந்த விரதம், ஆன்மிக தலைவர்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்றுள்ளது. ஈஷா யோகா நிறுவனர் சத்குரு, விரதம் இருக்கும் பிரதமரை மனமுவந்து பாராட்டியுள்ளார். கும்பாபிஷேகம் நடக்கும் 22ம் தேதி விரதத்தை நிறைவு செய்கிறார்.
ராமர் சென்ற வழியில்: வரும் 22ல், உ.பி.,யின் அயோத்தி நகரில், ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதில் பங்கேற்பதற்கு முன், பிரதமர் மோடி தமிழகத்தின் ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் புனித தலங்களில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளார். ஜீவாத்மா, பரமாத்மாவை அடைவதற்கான வாழ்க்கை நெறிமுறைகளை சொல்லி கொடுத்தவர் அவதார புருஷனான ராமர். ராமன் அவதரித்ததால் அயோத்திக்கு பெருமை. அயோத்தியின் தசரத வம்சத்திற்கு குலதெய்வமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை தான், ராமர் தினமும் தொழுது வந்தார். அதனால், அயோத்தி மாநகருக்கும், ஸ்ரீரங்கத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ராம அவதாரம் நிறைவு காலத்தில், தன்னிடம் அடைக்கலமாகி இருந்த அனைவருக்கும், ராமர் தனித்தனியாக பரிசு கொடுத்தார். அதில், ராவணனின் சகோதரரான விபீஷணனுக்கு, ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை பரிசாக கொடுத்தார். ராவணனை வெற்றி கொண்ட ராமர், இலங்கையை மீட்டு, விபீஷணனிடம் ஒப்படைத்தார். ராமர் கொடுத்த பரிசுடன் இலங்கைக்கு புறப்பட்ட
விபீஷணன், ரெங்கநாதரை அவருடன் எடுத்துச் சென்றார். விபீஷணனால் எடுத்துச் செல்லப்பட்ட ரெங்கநாதர், முன்னரே சங்கல்பம் செய்தபடி, கொள்ளிடத்திற்கும், காவிரிக்கும் இடைப்பட்ட பகுதியில், ஸ்ரீரங்கத்தில் கிடந்த கோலத்தில் எழுந்தருளினார். அதனால், அயோத்தியும், ஸ்ரீரங்கமும் பிரிக்க முடியாத திவ்ய தேசங்களாக திகழ்கின்றன. மேலும் ராமயணத்துடன் தொடர்புடைய ராமர் சென்ற பல முக்கிய தலங்களை பிரதமர் மோடி வழிபட்டு வருவது குறிபிடத்தக்கது,