ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சார்பில் அயோத்தி ராமருக்கு வஸ்திரம்; பிரதமரிடம் வழங்கப்பட்டது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜன 2024 01:01
உத்தர பிரதேசத்தின் அயோத்தி நகரில் நிர்மாணிக்கப்படும் ராமர் கோவில் திறப்பு விழாவுக்கான பாரம்பரிய சடங்குகள் யாகத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. ஜன. 21ம் தேதி வரை தொடரும் சடங்குகளை அடுத்து மறுநாள் கும்பாபிஷேகம் நடந்தேறும். உலகமே எதிர்பார்க்கும் கும்பாபிஷேகம் ஜனவரி 22ம் தேதி மதியம் 12:20 மணிக்கு நடக்கிறது. ராமர் சிலையை, புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கருவறை (கர்ப்பகிரகம்) வரை பிரதமர் மோடி எடுத்து செல்ல உள்ளார். இதற்காக பிரதமர் தற்போது 11 நாள் விரதம் இருந்து வருகிறார். இந்நிலையில், அயோத்தி ராமர் கோயில் பிராணப் பிரதிஷ்டைக்கு முன்னதாக ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசிக்க பிரதமர் இன்று ஸ்ரீரங்கம் வருகை தந்தார். ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீரங்கம் வந்த அவர் கார் மூலம் கோயிலுக்கு சென்றார். வழிநெடுகிலும் மக்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். 108 வைணவத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சென்றார். அங்கு பட்டர்கள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். ரங்கநாதர், ராமானுஜர் , கருடாழ்வார் , சக்கரத்தாழ்வார் சன்னதியில் பிரதமர் வழிபட்டார். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு கொண்டு செல்ல பரிசு வழங்கப்பட்டது.