திருப்பரங்குன்றத்தில் தை கார்த்திகை விழா; கொட்டும் மழையில் நடைபெற்ற தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜன 2024 03:01
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை கார்த்திகை, தெப்பம் முட்டுத் தள்ளும் நிகழ்ச்சியும், கொட்டும் மழையில் தேரோட்டமும் நடந்தது. நாளை (ஜன. 21) தெப்பத் திருவிழா நடக்கிறது.
சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை சர்வ அலங்காரத்தில் ஜி.எஸ்டி. ரோடு அருகேயுள்ள தெப்பக்குளம் கரையில் எழுந்தருளினர். கோயில் சிவாச்சார்யார்கள் யாகம் வளர்த்து சுத்தியல், அரிவாள், உளி ஆகியவற்றிற்கு தீபாராதனை முடிந்து தெப்பக்குள தண்ணீரில் அமைக்கப்பட்டிருந்த மிதவை தெப்பத்தில் முகூர்த்தகால் கட்டப்பட்டது. மூங்கிலால் சுவாமி தெப்பத்தை முட்டுத் தள்ளும் நிகழ்ச்சி நடந்தது.16கால் மண்டபம் முன்பு அலங்கரிக்கப்பட்டிருந்த சிறிய வைரத் தேரில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளினர். பூஜை முடிந்து தேர் சக்கரங்களில் பூசணிக்காய்கள் வைத்து தேங்காய் உடைக்கப்பட்டது. பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க ரத வீதிகளில் வலம் வந்தது. நாளை காலை சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை மிதவை தெப்பத்தில் எழுந்தருளி தெப்பத் திருவிழா நடக்கிறது.