பதிவு செய்த நாள்
20
ஜன
2024
04:01
ராமேஸ்வரம்; பிரதமர் மோடி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்தக் கடல், கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தார்.
ஜன., 22ல் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் யொட்டி பிரதமர் மோடி 11 நாள் விரதம் இருந்து தினமும் இந்தியாவில் உள்ள முக்கிய புனித தலங்களில் சுவாமி தரிசனம் செய்து வருகிறார். இன்று மதியம் 2:15 மணிக்கு திருச்சியில் இருந்து ஹெலிகாப்டரில் ராமேஸ்வரத்தில் அமிர்தா பள்ளி வளாகத்தில் வந்திறங்கினார். பிரதமரை தமிழக ஏ.டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வால், ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன், போலீஸ் எஸ்.பி., சந்தீஷ் வரவேற்றனர். பின் அங்கிருந்து பிரதமர் மோடி காரில் புறப்பட்டார். அப்போது சாலை இருபுறமும் கூடியிருந்த பொதுமக்கள் ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டபடி பிரதமருக்கு மலர் தூவி வரவேற்றனர்.
புனித நீராடினார் : ராமேஸ்வரத்தில் ராமகிருஷ்ண மடத்தில் 10 நிமிடம் ஓய்வுக்கு பிறகு மீண்டும் காரில் புறப்பட்ட பிரதமர் மோடி மத்திய, மாநில பாதுகாப்பு படையுடன் மதியம் 3:15 மணிக்கு அக்னி தீர்த்த கடலுக்கு சென்று மூழ்கி புனித நீராடினார். பின் ஈரத் துணியுடன் அங்கிருந்து பேட்டரில் காரில் புறப்பட்டு கோயில் கிழக்கு கோபுர வாசலுக்கு மதியம் 3:30 மணிக்கு வந்தார். பிரதமருக்கு, கோயில் குருக்கள் பூர்ண கும்ப மரியாதை கொடுத்து கோயிலுக்குள் அழைத்து சென்றனர். பின் கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை பிரதமர் நடந்து சென்று புனித நீராடினார். கோயில் வளாகத்தில் புதிய ஆடை அணிந்து கொண்டு ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி முன் அமர்ந்து பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தார்.
22 தீர்த்தம்; கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களான மகாலட்சுமி தீர்த்தம், சாவித்திரி தீர்த்தம், காயத்ரி தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், சங்கு தீர்த்தம், சக்கர தீர்த்தம், சேது மாதவ தீர்த்தம், நள தீர்த்தம், நீல தீர்த்தம், கவய தீர்த்தம், கவாட்ச தீர்த்தம், கந்தமாதன தீர்த்தம், பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம், கங்கா தீர்த்தம், யமுனை தீர்த்தம், கயா தீர்த்தம், சர்வ தீர்த்தம், சிவ தீர்த்தம், சத்யாமிர்த தீர்த்தம், சந்திர தீர்த்தம், சூரிய தீர்த்தம், கோடி தீர்த்தம் என 22 தீர்த்தங்களில் இருந்து, அயோத்தி கும்பாபிஷேகத்திற்கு புனித நீர் எடுத்து செல்கிறார்.