பதிவு செய்த நாள்
20
ஜன
2024
05:01
திருப்பூர்:பழனிக்கு பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்களுக்கு மொபைல் போன் சார்ஜ் செய்யும் வசதி ஏற்படுத்தி, தாராபுரத்தைச் சேர்ந்த முஸ்லிம் வியாபாரி ஒருவர் சேவை அளித்து வருவதை பலரும் பாராட்டி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் முருகன் கோவிலுக்கு தைப்பூசத் தேரோட்டத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக செல்வது வழக்கம். அவ்வகையில், பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு குடிநீர், பிஸ்கட், உணவு என பல்வேறு இடங்களிலும் பலரும் இலவசமாக வழங்குவர். இவ்வாறு பழனி பாத யாத்திரை பக்தர்களுக்கு திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தைச் சேர்ந்த பாய் வியாபாரி அன்வர் அலி, 62, என்பவர், தன் கடை முன் மொபைல் போன் சார்ஜ் செய்து கொள்ளும் வகையில், 65 பிளக் பாயின்ட் பேனல் போர்டு அமைத்துள்ளார். ஒரு தாய் மக்கள் நாம் என்போம் என்ற தலைப்பில் பழனி பாதயாத்திரை பக்தர்கள் தங்கள் மொபைல் போன்களை இலவசமாக சார்ஜ் செய்து கொள்ளலாம் என்ற அறிவிப்பு பலகையும் வைத்துள்ளார். காலை 6:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை இந்த சேவையை அவர் வழங்கி வருகிறார். மதம் கடந்து மனிதநேயம் காட்டி வரும் அன்வர் அலியின் சேவையை, பாத யாத்திரை செல்லும் பக்தர்கள் பாராட்டுகின்றனர்.