ராமரின் வாரிசுகள் பிறந்த இடம் திருப்புத்தூர்; 1980ம் ஆண்டு கும்பாபிஷேக மலரில் தகவல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜன 2024 03:01
திருப்புத்துார் : ராமாயணத்திற்கும் சிவகங்கைக்கும் உள்ள தொடர்பு 1980 ஆண்டு வெளியிடப்பட்ட திருப்புத்துார் பூமாயி அம்மன் கோயில் கும்பாபிஷேக மலரில் விளக்கப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நாளை (ஜன.22 ல்) நடைபெற உள்ளது. ராமாயணத்துடன் சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கும் பல தொடர்புகள் உள்ளன.
சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் பூமாயிஅம்மன் கோயிலில் 1980ல் நடந்த கும்பாபிஷேகத்தின் போது வெளியிடப்பட்ட மலரில் ஆறுமுகம்பிள்ளை சீதைஅம்மாள் கல்லுாரி நிறுவனர் நா.ஆறுமுகம்பிள்ளை இப்பகுதிகளுக்கும் ராமாயணத்திற்கும் உள்ள தொடர்புகளை குறிப்பிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் ராமாயணம் எழுதிய வால்மீகி முனிவருக்கு சிலை உள்ளது. அருகிலேயே அகத்தியலிங்கமும் உள்ளது. வனவாசத்தின் போது ராமர், சீதைபிராட்டியார் இப்பகுதிக்கு வந்ததாகவும் புராணத் தகவல்கள் கூறுகின்றன.
திருப்புத்துார் சீதளிக்குளத்தின் பெயரே சீதை பிராட்டியார் குளத்தின் நீரை தெளியச் செய்ததால் வந்ததாகவும் கூறப்படுகிறது. சீதை கர்ப்பிணியாக இருந்த போது இங்கிருந்த வால்மீகி ஆசிரமத்திற்கு அனுப்பப்பட்டார். அந்த ஆஸ்ரமத்தில் லவன், குசன் பிறந்துள்ளனர். ராமருடைய குதிரையை லவகுசர்கள் பிடித்து கட்டிய இடம் புதுக்கோட்டை மாவட்டம் திருக்களம்பூர். அந்த குதிரைகளின் குளம்பு பட்ட சிவலிங்கம் இங்கு கதளீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இக்கோயிலிலும் வால்மீகியின் சிலை உள்ளது. இங்கு ஆதிசங்கரரும் வந்துள்ளார். அவருடைய சிலையும் உள்ளது.
கதளீஸ்வரர் கோயிலில் இன்றும் மூலவரைச் சுற்றியுள்ள பிரகாரத்தில் வாழையடி வாழையாக செவ்வாழை வளர்கிறது. இத்தலத்தில் வழிபட்டால் மக்கட் பேறு பெருகும் என்ற நம்பிக்கையும் உள்ளது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கண்டேன் தேவியை; திருப்புத்துார் முன்னாள் எம்.எல்.ஏ., தென்னரசு தனது மேடை பேச்சுகளின் போது சில கிராமங்களுக்கும் ராமாயணத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து குறிப்பிட்டுள்ளார். கல்லல் ஒன்றியத்தில் கொங்கரத்தி என்ற கிராமம் உள்ளது. வனவாசத்தின் போது இங்கு வந்த லட்சுமணன், சூர்ப்பனகையின் கொங்கையை அறுத்த இடம் இது என்றும், இலங்கையில் சீதையைப் பார்த்து விட்டு வந்த அனுமன் ராமரை பார்த்து கண்டேன் தேவியை என்று தகவல் சொல்லிய இடம் தேவகோட்டை அருகே உள்ள கண்டதேவி கிராமம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.