பதிவு செய்த நாள்
22
ஜன
2024
08:01
இன்று கும்பாபிஷேகம் நடக்கும் அயோத்தி ராமர் கோவிலில், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெகத்குரு விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் பங்கேற்றுள்ளார்.
ராமர் கோவில் உருவானதில் காஞ்சி மடாதிபதிகளின் பங்களிப்பு
காஞ்சி மடம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா
புரீ த்வாராவதி சைவ சப்தைதேமோட்சதாயகா என இந்த பாரத தேசத்தில் கூறப்பட்டுள்ள ஏழு மோட்சபுரிகளில் முதலாவதான அயோத்தியைக்கும் தெற்கே உள்ள ஒரே மோட்சபுரியாம் காஞ்சிக்கும் பல யுகங்களாக தொடர்பு இருந்து வருகிறது.
ரகுவம்ச சக்ரவர்த்தியான தசரத மஹாராஜாவுக்கு சந்தான பிராப்தம் ஏற்பட பிரார்த்தித்து வர, அவர் கனவில் அவர்களின் குல தெய்வமான அயோத்தியாவில் இருக்கும் தேவகாளி அம்மன் தோன்றி, காஞ்சிபுரம் சென்று காமாட்சி அம்மனை தரிசித்து புத்ர காமேஷ்டி யாகம் செய்தால் பலன் நிச்சயம் என ஆசீர்வதிக்க, அவ்வாறே காஞ்சியில் யாகம் செய்தபோது, என்னுடைய அம்சங்களுடன் கூடிய நான்கு மகன்கள் பிறப்பார்கள் என அசரீரி ஒலித்தது. அவ்வாறே அயோத்தியாவில் கோசலை, கைகேயி மற்றும் சுமித்திரைக்கு, ராமன், பரதன், லட்சுமணன் மற்றும் சத்ருக்கணன் ஜனித்தனர். பஞ்ச பூதங்களின் தொடர்பாக, சைவத்தில் எவ்வாறு காஞ்சிபுரம் பரிகார தலமாக கருதப்படுகிறதோ அதேபோல் சாக்தத்தில் (தேவி உபாசனையில்) அயோத்தியா பரிகார தலமாக கருதப்படுகிறது. ராமோ விக்ரஹவான் தர்ம என்றால், தர்மத்தின் ஸ்வரூபமாக திகழ்பவர் ராமச்சந்திர மூர்த்தி என பொருள். அவர் அவதரித்த அயோத்தியில் ஒரு கோவில் அமைய பல நுாற்றாண்டுகளாக முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அதில், காஞ்சி ஆச்சார்யர்கள் மூவரின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. கடந்த, 1986ம் ஆண்டு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அயோத்தியா சென்று விசேஷ பூஜைகள் செய்தார். காஞ்சிபுரத்தில் இருந்து ஸ்ரீ மஹா சுவாமிகள் ஸ்ரீராமச்சந்திர மூர்த்திக்கு வெண்குடையும், இரண்டு சாமரமும் விமானத்தில் அனுப்பி வைத்தார்.
அவைகளை ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அயோத்தியில் ஸ்ரீ ராமபிரானுக்கு அர்ப்பணித்தார். அதன் பின் 1989ம் ஆண்டு ஸ்ரீமடத்தில் ஸ்ரீராம் என்று பொறிக்கப்பட்ட செங்கற்களை ஆசீர்வதித்து விஷ்வ ஹிந்து பரிஷத்தினரிடம் அளித்தனர். அதைத் தொடர்ந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால், முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அத்வானி, ஜார்ஜ் பெர்னாண்டஸ் என பலர் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை கேட்டுக் கொண்டதன் பேரில், இதமாகவும், அதேசமயத்தில் உறுதியாகவும் இரு தரப்புக்கும் எடுத்துரைத்தார். பாரதம் முழுதும் எந்தவொரு அசாதாரணமான சூழலும் ஏற்படாதிருக்கக் காரணம் ஸ்ரீ ஆச்சார்யர்களின் அணுகுமுறையே என அனைத்து தரப்பினரும் கூறினர். ஸ்ரீராமர் கோவில் கட்டுவதற்கு பூமி பூஜைக்கு நாள் குறிக்கப்பட்டது. அது ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜயந்தி தினமாக அமைந்தது. கோவில் அமைய அவர் எடுத்து முயற்சிகளுக்கு அங்கீகாரம் போல் ஆயிற்று. ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பூமி பூஜையில் ஸ்தாபனம் செய்வதற்கு கருங்காலி மரத்தில் நவரத்தினங்கள் பதித்த சங்கையும் 2 செங்கல்களும், ஐந்து தங்க காசும் தாமரைப் பட்டயமும் அனுப்பி வைத்தார். கடந்த, 2023ம் ஆண்டு காசியில் தன் சாதுர்மாஸ்ய விரதத்தை முடித்துக் கொண்டு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், அயோத்தியில் சாரதா நவராத்திரியை அனுஷ்டித்தார். விஜயதசமிக்கு அடுத்த நாளான ஏகாதசியன்று ஸ்ரீ ராம் லல்லா சன்னிதிக்கு எழுந்தருளி விசேஷ பூஜைகள் செய்தார்.
அவர் கூறியபடி பிராண பிரதிஷ்டைக்கு நாள் குறிக்கவும் யாகசாலை ஆகிய வைதிக கார்யக்ரமங்களுக்கு காசியை சேர்ந்த கணேஷ்வர சாஸ்திரி திராவிட் என்பவர் நியமிக்கப்பட்டார். காசி லட்சுமிகாந்த் மதுரநாத் தீட்சித் (86) தலைமை வகிக்கிறார். கோவிலுக்கு சாஸ்திர ரீதியாக அனைத்தையும் ஏற்பாடு செய்து கொடுப்பதை மூன்று சங்கராச்சாரியார்களும் தங்களுடைய சேவையாக செய்தனர். கும்பாபிஷேகத்தன்று பக்தர்கள் அனைவரும் ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம் எனும் மந்திரத்தை பாராயணம் செய்து ஸ்ரீராமர் ருளைபெறுவோம்.