பதிவு செய்த நாள்
25
ஜன
2024
09:01
அயோத்தி கும்பாபிஷேகம் நடந்த முதல் நாளிலேயே, பால ராமரை தரிசித்த பிரமிப்பில் இருந்து இன்னும் மீள முடியவில்லை, என, பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் விசாகா ஹரி கூறினார்.
அவர் கூறியதாவது: ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை அழைப்பின்படி, மகன் ராஜகோபால் ஹரியுடன் அயோத்தி ராமர் கோவில் பிராண பிரதிஷ்டையில் பங்கேற்கும் பாக்கியம் கிடைத்தது. விமான நிலையத்தில் இறங்கியது முதல், மீண்டும் விமானம் ஏறியது வரை அளிக்கப்பட்ட வரவேற்பு சிறப்பாக இருந்தது.
பிரம்மாண்டமான ராமர் கோவில் வளாகத்தில் அமர்ந்து பிராண பிரதிஷ்டை நிகழ்வை பார்த்தது, முதல் நாளிலேயே பால ராமரை தரிசனம் செய்தது என, அனைத்தும் ஒரு, மேஜிக் போல இருந்தது. இதை அனுபவத்தில் தான் உணர முடியும்; வார்த்தைகளால் விவரிக்க முடியாது. பிராண பிரதிஷ்டைக்கு அழைக்கப்பட்டிருந்த, 15,000 பேருக்கும் தேவையான அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. பிராண பிரதிஷ்டை முடிந்ததும், ஹெலிகாப்டரில் மலர்கள் துாவப்பட்டன. அப்போது, தேவர்கள் புஷ்ப பூஜை செய்வது போல இருந்தது. பிராண பிரதிஷ்டையில் பங்கேற்க கிடைத்த வாய்ப்பு, ராமரின் அழைப்பு என்று தான் சொல்ல வேண்டும். ராமர் விரும்பி இருக்காவிட்டால், இது சாத்தியமாகியிருக்காது. வந்தவர்கள் அனைவரும் வி.வி.ஐ.பி.,க்கள் என்றாலும், ராமர் முன் அனைவரும் மிகச் சாதாரணமானவர்களாகவே நடந்து கொண்டனர். ராமர் கோவிலின் ஒவ்வொரு துாண்களும், ஒவ்வொரு சிற்பமும், ஒவ்வொரு சன்னிதியும் பிரம்மாண்டம்தான். அயோத்தி நகரும், ராமர் கோவிலும் தேவோலகம் போல இருந்தது. ராமர் பிறந்த நாளில், ராமருக்கு பட்டாபிஷேகம் நடந்த நாளில் எப்படி இருந்திருக்குமோ, அப்படி இருந்தது அயோத்தி நகரம். எங்கு நோக்கினும் ராமர் மயம். அத்தனை கூட்டத்தில் காதில் கேட்டது ஜெய்ஸ்ரீராம் கோஷம் மட்டுமே. இந்த பிரமிப்பிலிருந்து இன்னும் மீள முடியவில்லை. அதை நினைத்தால் இன்னும் உடல் சிலிர்க்கிறது. ஆனந்த கண்ணீர் பெருக்கெடுக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
வார்த்தைகள் வற்றி கண்ணீர் சுரந்தது
தமிழ் திரையுலகின் தந்தை எனப்படும், இயக்குனர் கே.சுப்பிரமணியத்தின் மகள்; செவ்வியல் இசை, பரதநாட்டியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்; இந்திய துணை கண்டத்தின் கல்வி மற்றும் கலாசார குழு உறுப்பினர்; பரதநாட்டிய மூத்த கலைஞர் என்ற பன்முகம் கொண்டவர் பத்மா சுப்பிரமணியம். இவர், அயோத்தியில் ராமர் பிராணப் பிரதிஷ்டையில் பங்கேற்க அழைக்கப்பட்டவர். அவர் தன் அனுபவங்களை கூறியதாவது: சென்னையில் இருந்து லக்னோவுக்கு விமானத்திலும், அங்கிருந்து அயோத்தி வரை சொந்த காரிலும் வருவதாக கூறினோம். லக்னோ சென்றதும், மாலை போட்டு மரியாதை செய்து, காபி அருந்தும் முன் கார் பாஸ் கொடுத்து விட்டனர். காரில் புறப்பட்டபோது, எங்கும் காவிக்கொடியே பறந்தது. அயோத்தியை அடைந்ததும், 50 அடிக்கு ஒரு கடையில் சிறுமேடையிட்டு ராமர் பற்றிய பாடலோ, ஆடலோ நடந்து கொண்டிருந்தது. அதைச் சுற்றி பக்தர்கள் ஸ்ரீராம் என கோஷமிட்டனர். சாலையின் இருபுறமும் 50 அடி கட்அவுட்டில், விதவிதமாக ராமர் நின்று ஆசி வழங்கினார். ராமர் கோவிலின் ஒவ்வொரு கல்லிலும் கலைநயம் மிளிர்ந்தது. நிகழ்விடத்துக்கு சென்றதும், எங்களுக்கான கேபினுக்குள் அமர வைத்து, குடிநீர், காபி, உணவு உள்ளிட்டவற்றை வழங்கினர். இ-டாய்லெட்டும் சுகாதாரமாக இருந்தது. மோடி ஆராதனை காட்டியதும், ஒவ்வொரு பிளாக்காக அனுப்பினர். நான், ராமரின் அழகையும், அலங்காரத்தையும் கண்டு என்னை மறந்தேன். வாயிலிருந்த வார்த்தைகள் வற்றி விட்டன. கண்ணீர் பெருக்கெடுத்தது. 500 ஆண்டுகளுக்கு முன், அயோத்தியில் பிறந்தது போன்ற உணர்வு வந்தது.இவ்வாறு அவர் கூறினார்.
சுவாசத்தில் கலந்த ராம பக்தி
ஜி.உமாசங்கர், தலைவர், ஜி.யு.எஸ். குளோத்திங் நிறுவனம், திருப்பூர்.அயோத்தி மிகச்சிறிய கிராமம். அதன் தெருக்களில் நடந்த போது, மகாபாரதம், ராமாயணம் நாடகங்களில் இடம் பெற்றிருந்த அரங்குகள் போல் இருந்தது. அங்கிருந்த வீடுகள், அந்த காலத்து அரசர்கள் வீடுகள் போல காட்சி அளித்தன. அங்குள்ள மக்கள் ராமர் மீது அதிக பக்தி வைத்திருந்ததை பார்க்க முடிந்தது. மாற்று திறனாளிகள், பார்வையற்றவர்கள், ராம் ராம் சீதா ராம் என்ற பாடலை, 13 மணி நேரம் பாடினர்.அவ்வளவு பக்தியை பார்க்க முடிந்தது. ராமர் மீதான பக்தி, அவர்களின் சுவாசத்தில் கலந்திருப்பதை பார்க்க முடிந்தது. இவ்வாறு அவர் கூறினார்.